உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாடா மல்லி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 13


போலீஸ் என்றதும், அந்தப் பேருந்து சடன் பிரேக் கோடு நின்றது. ஒட்டுநர் இருக்கையிலிருந்தபடியே திரும்பி ‘ஏன்யா. நீ கண்டக்டர் வேலை செய்ய வந்தியா? இல்ல கள்ளக்காதலை ரசிக்க வந்தியா?” என்றார். அதற்குப் பிறகுதான், கண்டக்டருக்கும் சுரனை வந்தது. முடங்கிக் கிடக்கும் பறவையைப் பார்த்து, நிதானமாகவும் நம்பிக்கையோடும் நடக்கும் பூனைபோல் நடந்தார். சுயம்புவின் கையைப் பிடித்து வெளியே இழுத்தார். அவன் எந்த எதிர்ப்பும் காட்டாமல் இழுத்த இழுப்பிற்கு வந்ததில், அவருக்கு பயம் கலைந்தது. அதற்காக ஒரு சலுகை காட்டுவதுபோல், அவன் பெட்டியாகத்தானிருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்பட்டதைத் துக்கி அவன் கையில் திணித்தார். அவன் முதுகில் கை வைத்தபடியே. அவனை நடத்தினார். பின்வாசலுக்குக் கொண்டு வந்து, ஒவ்வொரு படியாய் இறங்கி, இறங்கி, அவனையும் இறக்கி விட்டார். அவன் காட்டிய பார்வை தாங்கமாட்டாது மீண்டும் அவனை ஏற்றிவிடலாமா என்பதுபோல் விசிலை ஊதாமலேயே விட்டு வைத்தார். இதற்குள் பாதிப் பயணிகள் மிச்சம் மீதிகளின் மெளனச் சம்மதத்தோடு சே. சே. நல்ல பஸ்ஸுய்யா. என்று முணுமுணுத்தார்கள். நடத்துநர் விசிலடித்தார். மனசாட்சியை பலவீனப்படுத்திக் கொண்டு பலமாகவே விசிலடித்தார். பேருந்து பேரிரைச்சலோடு பாய்ந்தது.

தரையில் கால் தட்ட நின்ற அவன் - அந்தச் சுயம்பு, கையிலிருந்த சூட்கேஸை வீசியடித்தான். அதுவும் அவன் மனம் போல் கிறீச்சிட்டது. அப்படியும் ஆத்திரம் தாங்காமல் அந்தப் பெட்டியைக் காலால் இடறினான். பின்னர் ரத்தக்கசிவுக் கால்களோடு அந்தப் பெட்டிமேல் உட்கார்ந்தான். அந்தக் காடே கதறுவதுபோல் கத்தினான்.

“எம்மா.. என்னை எதுக்காக இப்படிப் பெத்தே? நான் யாரும்மா... யாரு?”

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/35&oldid=1248856" இலிருந்து மீள்விக்கப்பட்டது