உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாடா மல்லி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சு. சமுத்திரம்


ஒருவரை ஒருவர் ஆதரவாய்ப் பிடித்தபடி கும்பலாய்க் கிடந்தனர். டிரைவருக்குப் பின்னால் உள்ள நீண்ட பெஞ்சில் ஏழெட்டுப் பேர். இவர்கள் போதாது என்பது போல் கீழே, ஆறு பேர் மூட்டை முடிச்சுக்களாய் சுருங்கிக் கிடந்தார்கள். சுயம்புவை கேபினில் ஏற்றுவதா, அல்லது பின்பக்கம் அனுப்புவதா என்று யோசித்த டிரைவர் அவனை அசைபோட்டுப் பார்த்தார். பிறகு அவன் பாண்ட் சட்டை போட்டிருப்பதைப் பார்த்து, கேபினுக்குள் ஏற்றும்படி கிளீனருக்கு சைகை செய்தார். உடனே, அந்த வண்டிக்கு ஒரு காது இருப்பதுபோல், கதவு திறந்தது. சுயம்பு, டயர் சக்கரத்தில் கால் பதித்து மேலே ஏறிக் கொள்வதற்காக, கிளினர் கையை வெளிப்பக்கம் நீட்டினான். அந்த இருக்கை அறைக்குள் ஒளிர்ந்த விளக்கில் வெளியே தெரிந்த கையை சுயம்பு பார்த்தான். அது உருண்டு திரண்டு, ஒவ்வொரு விரலும் ஒரு இரும்புக் குச்சியாய்த் தெரிந்தது. அதைப் பற்றிக்கொள்ள ஆசையோடு கையை நீட்டிய சுயம்பு, பிறகு கூச்சத்தோடு, நீட்டிய கையை மடக்கிக் கொண்டான். ஆனாலும், கிளினரின் கை அவனை ‘கிளினாக உள்ளே இழுத்து பெஞ்சில் போட்டது. பிறகு அவனிடம் ‘சகட்டு மேனிக்கு இருபது ரூபாயை வாங்கி டிரைவரிடம் கொடுத்தது. அவர் அதை சிகரெட் மாதிரி உருட்டி, காதில் சொருகிக் கொண்டார். இப்படி இரண்டு காதுகளிலும் பல சொருகல்கள்.

அந்த லாரி, முன்னால் சூழ்ந்த இருளைக் கொலை செய்தபடியே ஒடியது. பின்னால், கூட்டத்தில் இடிபட்ட சுயம்பு, பாதி உடம்பைத் தனது மடிமேல் போட்டபடி தன் முகத்தை முகத்தால் இடித்துக்கொண்டு தூங்கியவனை, நோட்டம் போட்டான். அவன் உருண்டு திரண்ட தோளையும், வலைப் பணியனுக்குள் திமிறிக் கொண்டிருந்த மார்பையும் பார்த்து, தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/38&oldid=1248864" இலிருந்து மீள்விக்கப்பட்டது