உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாடா மல்லி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சு. சமுத்திரம்


தூங்கிக் கொண்டிருந்த புளியமர அடிவாரத்தின் வழியாக நடந்தான். அங்கிருந்து, மரமில்லாத ஒரு மொட்டை மலைக்கும், மழையில்லா அந்த ஊருக்குமிடையே ஒடும்’ மணல்வாரி ஒடை வழியாக, கால்களை நடத்தி கிழக்குப் பக்கம் சுற்றி, அங்கிருந்து மேற்குப் பக்கம் போனான். தெரு நாய்களின் குலைப்பையும் பொருட்படுத்தாமல் வேப்பமரம் கடை விரிக்க, ‘வைக்கோல் படப்பு வெள்ளைக் குகையாய்த் தோன்ற, தனது வீட்டருகே வந்தான். அந்த வீடு பண்ணைச் சேவகம் செய்யும் ஒலை வீடாகவும் இல்லை; அல்லது பண்ணையார்த்தனத்தைக் காட்டும் பளிங்குக்கல் வீடாகவும் இல்லை. சுயசார்பைக் காட்டும் சுமாரான வீடு.

சுயம்பு, வீட்டுக்குள் நுழைய மனமில்லாமல் கூட்டுக் குள் நுழைய விரும்பாத கோழிக் குஞ்சு போல், அந்த வேப்ப மரத்தில் சாய்ந்து கிடந்தான். அப்போது எதிரித்தனமாய்க் குலைத்தபடியே அந்த வீட்டிலிருந்து ஒரு குட்டி ராஜபாளையம் சீறி வந்தது. ஆறு மாதக்குட்டி அவனைப் பார்த்ததும் செல்லமாய்ச் சிணுங்கியது. வாலை பின்கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டு தூசி படிந்த அவன் கால்களையும், கரங்களையும், நாக்கால் ஒட்டடை யடித்தது. பிறகு அவன் வருகையைச் சொல்வதற்காக, அவன் வீட்டை நோக்கி ஓடப்போனது. சுயம்பு கீழே குனிந்து, அந்தக் குட்டியை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அது சத்தம் எழுப்பாமல் இருக்க அதன் இரண்டு தாடைகளையும் மூடி, அதன் முனையைப் பிடித்துக் கொண்டான்.

அந்த நாய்க்குட்டியின் சீற்றக் குலைப்பாலோ அல்லது செல்ல முனங்கலாலோ, ஏற்கெனவே இரவு முழுவதும் தூங்காமலும், விழித்திருக்காமலும், பாயில் சும்மா புரண்ட மரகதம், வெளியே வந்தாள். ஏதோ ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/42&oldid=1248869" இலிருந்து மீள்விக்கப்பட்டது