உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாடா மல்லி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 25


எல்லோரும் ஆடிப்போனார்கள். பிள்ளையார் அவன் பக்கத்தில் அதட்டலோடு வந்து நின்றார். ஆறுமுகப் பாண்டி கோபமாக ஏதோ பேசப்போக, அவன் மனைவி கோமளம் கணவனை இதமாகப் பிடித்துக்கொண்டாள். ‘பிளஸ்-ஒன் தங்கையை அந்த எதிர்கால எலெக்ட்ரானிக் எஞ்சினியருடன் கனெக்ஷன்’ கொடுக்க நினைத் திருப்பவள். ஆகையால் மைத்துனன்மீது ஒரு வாஞ்சை பாம்பும் சாகாமல் பாம்படித்த கம்பும் நோகாமல் எப்படிப் பேசுவது என்று, அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது, பிள்ளையார், எங்கேயோ பார்த்தபடி அதட்டினார்.

“எருதுக்கு நோவாம். காக்கைக்குக் கொண்டாட்ட மாம். இப்போவாவது கண் குளிர்ந்து மனம் குளிர்ந்து மனம் குளிர்ந்தால் சரிதான்.”

பிள்ளையார் பார்த்த வைக்கற்போரிலிருந்து, அவரது தம்பியும், தம்பி பெண்டாட்டியும் விழுந்தடித்து ஓடினார்கள். தம்பிக்கும் அவருக்கும் தீராப் பகை இரு தடவை கோர்ட்டிற்குப் போனவர்கள். பிள்ளையார், பேசி முடித்ததும், மனைவிக்காரி வெள்ளையம்மா அவருக்கு ஒத்தாசை செய்தாள்.

“கொள்ளிக்கட்டைக் கண்ணுங்க, என் பிள்ளைமேல பட்டுப்பட்டு, பாவிப்பய பட்டுப் போயிட்டான்.”

இன்னொரு பொம்பளச் சண்டையை இழுக்க விரும்பாத பிள்ளையார் “சரி, சரி உள்ளே வாங்க” என்று அதட்டினார். அந்த அதிகாலையிலும் நகத்தைக் கடித்தபடி வெளியே இருந்து வந்த இளைய மகள் மோகனாவை அவர் பார்த்தார். ஆனாலும், அவள் அவர் மனதில் பதியவில்லை. வேறொரு சமயமாக இருந்தால், இதே இந்தப் பிள்ளையார், அவளைக் கொழுக்கட்டை மாவாய்ப் பிசைந்திருப்பார்.

சுயம்புவை, மரகதம் கூட்டி வருவாள் என்ற அனுமானத்தில் எல்லோரும் உள்ளே போனார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/47&oldid=1248876" இலிருந்து மீள்விக்கப்பட்டது