உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை தமிழ் இலக்கிய வரலாற்றில் தன்வரலாற்று நூல்கள் இன்றியமையாத இடத்தைப் பெற்று விளங்குவன. படைப்பாளியின் பட்டறிவு, சமகாலச் சமூகச்சூழல், சமுதாய மானிட உறவு எனப் பல்வேறு வகையான பரிமாணங்களைத் தன்வரலாற்று நூல்கள் பெற்றுள்ளன. இலக்கியப் படைப்பாளர்களின் ஒவ்வொரு படைப்பிலும் இலைமறை காயாக அவர்களுடைய வாழ்வு அனுபவங்கள் பதிவாகிவிடுகின்றன. ஒரு சிறு கவிதையிலும்கூட அவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரலாற்று நிகழ்வுக் குறிப்புகளை நயமாகக் குறிப்பிட்டுவிடுகின்றனர். ஒளவையாரின் சங்கப் பாடல்களால் அவருக்கும், அரசருக்கும், சமூகத்திற்கும் இடையேயுள்ள வாழ்வியல் பின்னணிகள் தெரிய வருகின்றன. அகப்பாடல்களிலும், புறப்பாடல்களிலும் இத்தகைய குறிப்புகள் மிகுதியாக இருந்தாலும் படைப்பாளியின் நோக்கம் வரலாற்று நூல்கள் எழுதுவதன்று. ஆனால் இயல்பாகவே அவர்தம் படைப்புகளில் இத்தகைய வாழ்வுக் குறிப்புகள் அமைந்துவிடுகின்றன. தன்வரலாற்று நூல் எழுதுவோர் இத்தகைய குறிப்புகளை நேராகவே குறிப்பிட்டுவிடுகின்றனர். அவர்களுடைய வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களும் அவர்கள் மனிதர்களோடு கொண்டிருந்த உறவும் நேயமும் இத்தகைய நூல்களால் நன்கு புலனாகின்றன. தாம் வாழ்ந்த நெடிய வாழ்க்கையில் தொடக்கம் முதல் இன்றுவரை தம்வாழ்வு நிகழ்வுகளை நினைவிற்கொண்டு பிறருக்குப் பயன்படும் வண்ணம் எழுதுவது என்பது எளிமையானதன்று. ஒருவகையில் தன்வரலாற்று நூலினை எழுதுவது என்பது தன்னையே ஆத்ம பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வது போன்றதுதான். - தமிழிலக்கிய வரலாற்றிலும் பிறமொழி இலக்கியவரலாற்றிலும் இத்தகைய தன்வரலாற்று இலக்கியங்கள் பல உள. ஆனந்தரங்களின் நாட்குறிப்புகள், வ.உ.சி.யின் வரலாறு, பாரதியின் சுயசரிதை, உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம்', திரு.வி.க. அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்', நாமக்கல் கவிஞரின் என் கதை’, கோவை அய்யாமுத்துவின் "எனது நினைவுகள் போல்வன குறிப்பிடத்தக்க தன்வரலாற்று நூல்கள்