உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 1. கால் பந்தாட்டம்
(FOOT BALL)


1.   தாக்கும் குழு (Attacking side)

      எதிர்க் குழுவினருக்குரிய ஆடுகளப் பகுதிக்குள்ளே பந்தைத் தங்கள் வசம் வைத்திருந்து, எதிர்க்குழு இலக்கு நோக்கி உதைத்தாட முயல்பவர்கள், தாக்கும் குழுவினர் என்று அழைக்கப்படுகின்றார்கள்.

2.   முனைப் பரப்பு (Corner Area)

ஆடுகளத்தின் பக்க கோடும் கடைக் கோடும் இணையும் இடத்தில் கொடிக்கம்பு ஒன்று ஊன்றப்பட்டிருக்கும். ஒவ்வொரு முனையில் இருந்தும், ஆடுகள உட்பகுதியில் 1 கெச ஆரத்தில் கால்வட்டப்பகுதி ஒன்று அமைக்கப் பட்டிருக்கிறது. இது போன்ற முனைப் பரப்புப் பகுதிகள் நான்கு முனைகளிலும் இடம் பெற்றிருக்கின்றன.

முனை உதை (Corner Kick) உதைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் தாக்கும் குழுவினர், இந்தக் கால் வட்டப் பரப்பினுள் பந்தை வைத்துத்தான் உதைக்க வேண்டும்.