முன்னுரை
கடலை நீந்திக் கரை கண்டார் சிலர் என்பார்கள்.
இராமாயணம் எழுத முற்பட்ட கம்பரும், 'திருப்பாற் கடலை, கரை ஓரத்து நின்று நக்கிக்குடிக்கின்ற பூனை ஒன்றின் நிலையிலிருக்கின்றேன்' என்று முதலிலேயே, தன் திகைப்பை எழுதி விட்டார்.
விளையாட்டினை எண்ணும் பொழுது, அந்த மலைப்புதான் முதலில் வந்து நிற்கிறது.
ஒவ்வொரு விளையாட்டும் ஒவ்வொரு கடலாகவே தோன்றுகிறது. விளையாட்டின் அமைப்பிலே அது எல்லையற்றதாகவும், விளையாட்டுத் திறன் நுணுக்கங்களிலே அது பேராழம் கொண்டதாகவும் விளங்குகிறது.
நொடிக்கொரு அலையாக நிறைத்துத் தள்ளும் கடல் உலகைப் போல, நொடிக்கொரு மாற்றம், ஏற்றம் எல்லாம் விளையாட்டுலகில் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நானும் விளையாட்டுக்களைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறேன். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி விட்ட போதும், இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன்.