வேரில் பழுத்த பலா
உடை என்பது. உடம்பை உடைத்துக் காட்ட அல்ல. மறைத்துக் கொள்ளவே, என்பதை, சரவணன் கொள்கையாகக் கொண்டிருப்பானோ என்ற சந்தேகம், எவருக்கும் வரலாம். இதை உறுதிப்படுத்துவதுபோல், ஒன்பதே ஒன்பது நிமிடங்களில், லுங்கி சுற்றிய உடம்பில், பாடாதி பளுப்பு பேண்டை ஏற்றி, பனியனுக்குமேல், கலர் ஜோடி இல்லாத ஒரு வெளுத்த சட்டையைப் போட்டுக்கொண்டு, அலுவலகத்திற்குத் தயாராகி, வாசலுக்கு வந்துவிட்டான்.
சரவணன், யோகாசனங்கள் போட்டவனுமல்ல, போடப் போகிறவனுமல்ல. யோக முறைகளைச் செய்பவனும் அல்ல. செய்யவேண்டும் என்று நினைப்பவனுமல்ல. ஆனாலும், அவற்றின் பலாபலன்கள் கைவரப் பெற்றவன் போல், அவை, அவன் முகத்தில் ரூபமற்ற ஒளியாகவும், அங்கங்களை அழகோடும், அளவோடும் வைத்திருக்கும் ரூபங்களாகவும் காட்டின. பள்ளிக்கூடக் காலத்தில் அடிக்கடியும், கல்லூரி காலத்தில் அவ்வப்போதும், கொஞ்ச நஞ்சமிருந்த வயலை விளைவிக்க, குளத்து மடையின் மதகைத் திறந்துவிட, முன்புறமாய் படுத்து, தலையை பின்புறமாய் திருப்பி, புஜங்காசனம் போடுவதுபோல் செயல்பட்டிருக்கிறான். வயல்களில் பாத்திகள் போட, கால்களை சுருக்காமலே, குனிந்து குனிந்து எழுந்து இன்னொரு யோகாசனம் போடுவது போல் பாடுபட்டிருக்கிறான். அவன் பயின்ற கல்லூரியில் தனக்குரியப் பாடங்களை, எழுத்தெண்ணிப் படித்ததோடு, கருத்தெண்ணியும் படித்திருக்கிறான். சிந்தனையை ஒருமுனைப் படுத்தியிருக்கிறான். ஆகையால், ஒருவேளை, அவனுக்கு உழைப்பே ஆசனங்களாகவும், படிப்பே யோக முறைகளாகவும் வலிய வந்திருக்கலாம். சுருட்டை முடிக்காரன், சொந்த நிறக்காரன், அதாவது மாநிறம் நிறமா என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மின்னிய மினுக்கம் சிவப்பையும் சிதறடிக்கும்.
அலுவலகத்திற்குப் போகும் ஆண்களில், அதிகார தோரணை தென்படும்படி நடக்கும் சிலர் கையில் ஒரு பெட்டி வைத்திருப்பார்களே. அப்படிப்பட்ட ஒரு பெட்டியைத் துக்கிக் கொண்டு புறப்பட்டான். இந்தப்