உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வேரில் பழுத்த பலா

பெட்டி, முதலில் அவனுக்கு ஒரு பெட்டி பூஷ்வாத் தனமாகத்தான் தெரிந்தது. ஆனாலும் பைல்களையும், சாப்பாட்டுப் பார்சலையும், அதில் வசதியாக வைத்துக் கொள்ள முடிந்ததால், அலுவலகம் கொடுத்த அந்தப் பெட்டியை ஏற்றுக் கொண்டான்.

அலுவலக வராண்டாவாகவும், வரவேற்பறையாகவும் உள்ள முன்னறையில், ஜன்னலோரமாக நாற்காலியில் உட்கார்ந்து, சிறிது இடைவெளியில் கிடந்த விசாலமான மேஜையில், அதுவும் அதன்மேல் வைக்கப்பட்ட டெலிபோனில், இரண்டு கால்களையும் தூக்கி விரித்துப் போட்டு, ஏதோ ஒரு நாவலையோ, கிசுகிசுவையோ படித்துக் கொண்டிருந்த தங்கை வசந்தா, காலடிச் சத்தம் கேட்டு, அண்ணனை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லாமல், கால்களை அவசர அவசரமாய் கீழே போட்டுக் கொண்டு, கீழே கிடந்த ஒரு துணியை எடுத்தாள். நாற்காலியையும், டிபாயையும், துடைக்கப் போகிறாளாம்.

சமயலறையில் இருந்து வெளியே வந்த முத்தம்மா, மகன், அதற்குள் புறப்பட்டுவிட்டதை எதிர்பாராதது போல், சிறிது பின்வாங்கி, முன்வாங்கினாள். ஏதோ பேசப்போனவள் அவனை, அபசகுனமாய் வழிமறிக்க வேண்டாம் என்பது போல், நிர்மலமாகப் பார்த்தாள்.

"என்னம்மா விஷயம்?"

"ஒண்ணுமில்லப்பா..."

"ஏதோ சொல்ல வந்தது மாதிரி தெரியுது."

முத்தம்மா, மூக்கின் மேல் விரல் வைத்தாள். இவனும். இவன் அப்பனை மாதிரிதான். வாயால் சொன்னால் புரியுமோ புரியாதோ. ஆனால், மனசுக்கும், வாய்க்கும் இடையே வெளவால் மாதிரி வார வார்த்தைகளைப் புரிஞ்சுக்குவான். அந்த மனுஷனும், நான் வாசலுலேயே நின்னால், என்ன. அரிசி வாங்கக் காசில்லையான்னு கேட்பார். தூசு விழுவது மாதிரி கண்களைத் துடைத்தால் ஒன் அம்மா வீட்டுக்கு போகணுமா என்பார். டங்குன்னு சாப்பிட்டுத் தட்டை வச்சால் எங்க அம்மா குணந்தான் தெரியுமே. நான் திட்டினால்தானே நீ வருத்தப்படனும்? என்பார். சீக்கிரமா வரப்படாதா என்று சிணுங்கிச் சொல்வேனோ, சிரிச்சுச் சொல்வேனோ. இன்னைக்கு பெரிய பயல. அம்மாகிட்ட தூங்க வைம்பார். அவர் மாதிரியே தான் இவனும். இப்போ இந்த நிலைமையில பார்க்க அவரும் இல்லை. பெரிய பயலும் இல்லை. முத்தம்மா, சிந்தனையை உள்முகமாய் விட்டபோது, சரவணன். வெளி முகமாகக் கேட்டான்.

எக்ஸ்பிரஸ் பஸ்ஸுக்கு நேரமாகுது. சீக்கிரமாச் சொல்லும்மா."