உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 11

வரச் சொன்னார். சரவணன் வண்டியை விட்டு இறங்கி, அவர் பக்கமாய் அதை உருட்டிக் கொண்டு போய், அவரைப் பார்த்தான்.

"யெல்லோ லைனை எதுக்கு ஸார் கிராஸ் செய்தீங்க?" சரவணன், அப்போதுதான் அந்த லைனைப் பார்த்தான். யெல்லோதான். ஆனாலும், அந்த மஞ்சள் நிறம், அம்மா, அண்ணி முகங்களில் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது இல்லாததுபோல் ஆனது. வழக்கமாக, அந்த டிரம்மைச் சுற்றி வராமல், அவன் வருவது புரிந்தது. அவன் மட்டுமல்ல, எல்லோருமே. எல்லோரும் ஒரு தப்பைச் செய்தால், அது ஜனநாயகமாய் இருக்கலாம். ஆனால் சட்டநியாயமாய் இருக்க முடியாது. தப்புத்தான். இதுல மஞ்சள் கோடு எங்கேய்யா இருக்குதுன்னு கேட்பது விதண்டாவாதம். ஒரு வேளை. இப்படி எல்லா வண்டிகளும் திரும்பித் திரும்பியே அது அழிபட்டிருக்கலாம்.

சரவணன், ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டுவிட்டு, அவரை நெருங்கப் போனான். அதற்குள் ஒரு கார், அவன் திரும்பிய அதே இடத்தில் திரும்பியது. கான்ஸ்டபிள் விசில் அடித்தார். கார் நின்றது மாதிரி போனது. கான்ஸ்டபிள் கோபத்தோடு பின்னால் ஓடினார். பிறகு அந்தக் கார்காரரிடம் கெட்ட வார்த்தைகளை வாங்கிக் கொண்டவர்போல் நிமிர்ந்தார். விறைப்பாக ஒரு சல்யூட் அடித்துவிட்டு, பின்புறமாய் நடந்தார். ஐஏஎஸ்ஸோ, ஐபிஎஸ்ஸோ, வேறு யாரோ. இதற்குள், இரண்டு சைக்கிள்கள் எதிர்த்திசையில் வந்தன. அவர் விசிலடித்தார். ஒருவழிப் பாதை சைக்கிள்காரர்கள், கீழே துள்ளிக் குதித்து, மடித்துக் கட்டிய வேட்டிகளை பருவப் பெண்கள்போல் நாணி கோணி பாதம் வரைக்கும் இழுத்துப் போட்டப்டி வந்தார்கள். அவர் தொப்பிக்கு மரியாதை கொடுக்கிறார்களாம்! போலீஸ்காரர், அவர்களிடம், காருக்கார டிரைவர் கொடுத்த கெட்ட வார்த்தைகளை விநியோகிப்பது போலிருந்தது. அவர்களோ, அவர் ஏதோ தங்களைப் பாராட்டுவதுபோல், அதற்கு தாங்கள் தகுதிப்பட்டாலும், புகழில் அடக்கம் வேண்டும் என்று அதற்கு அடங்கி நிற்பதுபோல், - மேடையில், பாராட்டுக்குரியவர் பெளவியமாய் பார்ப்பதுபோல் பார்த்தார்கள்.

அந்தக் கான்ஸ்டபிள், தனது டயரியை எடுத்தார். காகிதங்களைப் புரட்டிப் பார்த்தார். பென்ஸிலை எடுத்தார். அதற்குள் அவர்கள், அண்டிராயர்களுக்குள் கைவிட்டு, ஆளுக்கு இரண்டு காகிதங்களை நீட்டுவது தெரியாமல் நீட்டினார்கள். எந்தக் காகிதம் ஜெயிக்கும் என்று சரவணன் வேடிக்கை பார்த்தான், டயரிக் காகிதமா. அசோக சக்கரம் பொறித்த காகிதமா. அசோக சக்கரத்தில் மூன்று சிங்கங்கள் நிற்குதே. சிங்கம் விடுமோ. ஜெயித்து விட்டது.