18 வேரில் பழுத்த பலா
அஸிஸ்டெண்ட் டைரக்டரா டெஸ்பாட்ச் ரிஜிஸ்டரை செக் பண்றது. ஏஓவே பார்க்கமாட்டார். ஹெட்கிளார்க் இருக்காள். இவன் எதுக்கு? சந்தேகமே இல்லை. என்னை ஒழிக்கத்துக்கு திட்டம் போட்டிருக்கான். இரண்டாவது மெமோ கொடுக்கப்போறான்.
அவளை, அவன் ஏறிட்டுப் பார்த்தபோது, அன்னத்தின் கைகள் ஆடின. அந்த ஆட்டத்தில், அந்த பெரிய ரிஜிஸ்டரே ஆடியது.
"உட்காருங்க." "ஐ ஸ்ே. சிட் டவுன்." அன்னம் பயந்துபோய் உட்கார்ந்தாள். அவன், ரிஜிஸ்டரைப் புரட்டி, முந்தின நாள் கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கிறதா என்று. கடிதம் கடிதமாக, நம்பர் நம்பராக, முகவரியோடு பார்த்தான். எல்லாம் சரியாகவே இருந்தன.
"குட். நீங்க போகலாம்." அன்னம் எழுந்தாள். 'குட்’னு சொல்லிட்டு, தலையில் குட்டிட்டிங்களே ஸார் என்று கேட்பது மாதிரி, அவனைப் பார்த்தாள். இனிமேல். இப்டி மெமோ கொடுக்காதிங்க ஸார் என்று கேட்கலாமா. ஒருவேளை அப்படிக் கேட்டு, அதற்கே ஒரு மெமோ கொடுத்திட்டால். அன்னம், தயங்கித் தயங்கித் திரும்பப் போனாள். சரவணன் புன்னகை இல்லாமலே கேட்டான்.
"எதையோ சொல்லணுமுன்னு நினைக்கதுமாதிரி பார்க்கிங்க." "இல்ல ஸார். இல்ல ஸார்." "நான். சிங்கம் புலியில்ல. மனிதன்தான். எனக்கு எதுக்கு ஸார் மெமோ கொடுத்திங்க. மோசமான வார்த்தையாலகூட திட்டலாம். அதையே நல்ல வார்த்தையாய் கையால எழுதலாமான்னு கேட்க வாரிங்க. இல்லையா? நில்லுங்கம்மா, ஓடாதீங்க. செளநா மார்ட் கம்பெனிக்காரன் தந்த பொருட்கள்ல குவாலிட்டி சரியில்ல. குவான்டிட்டி மோசம். குண்டூசி முனை மழுங்கிட்டு. பேப்பர்ல இங்க் ஊறுது. ரப்பர். எழுத்துக்குப் பதிலாய் எழுதுன காகிதத்தைத்தான் அழிக்குது. பென்சில் சீவப் போனால் ஒடியுது. பால்பாயிண்ட் பேனாவுல, பாயிண்டே இல்ல. வாங்குன டேக்ல, ஒரு பக்கத்து முனை உதிரியாய் நிக்குது. அதனால இதையெல்லாம் சுட்டிக்காட்டி, அந்தக் கம்பெனிக்கு நாலு தடவை லட்டர் போட்டோம். நாலு தடவையும் ரிஜிஸ்டர்லயே அனுப்பும்படியாய் சொன்னேன். நீங்க ஒரு தடவை கூட ரிஜிஸ்டர்ல அனுப்பல. ஒங்க லெட்டரே கிடைக்கலேன்னு அவன் சொன்னால், பதில் சொல்ல வேண்டியது நீங்களா? நானா? சொல்லுங்க."