உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 29

சிதம்பரம் அடைக்கலத்தைச் சாடினார்.

அட பாவிப்பயலே. படுபாவியே. அய்யாகிட்டயும் பிராடுத்தனம் பண்ணிட்டியா? ஸார். இந்த பிராடுகிட்ட அன்றைக்கே சொன்னேன். யார் கிட்ட வேணுமுன்னாலும் பிராடு பண்ணுடா. ஆனால் இந்த சரவணன் சாரு நேர்மையாய் இருக்கிறவரு அவர் பேச்சும் நடையும் நல்லாவே காட்டுது. வாணான்டா வாணாண்டான்னேன். சத்தியமாய் சொல்றேன் ஸார். அன்றைக்கு நான் வெளியூர் பூட்டேன். பாக்கித் தொகையை ஒங்ககிட்டே கொடுக்கதுக்கு. என்னையும் ஏன் ஒங்க கிட்டே கூட்டிட்டு வந்தாமுன்னு இப்போதான் புரியது. நீங்க கொடுத்த மீதிப் பணத்துல ஒரு சிங்கிள் டிதான் வாங்கிக் கொடுத்தான் ஸார். இப்ப என்ன ஸார். பழையதுல்லாம்."

"ஒண்ணுமில்ல. ஆனால், அடைக்கலம் இப்படி செய்திருக்கப் படாது. அதுவும் இந்த மாதிரி ஒரு பெயரை சுமந்துகிட்டு."

"ஏய். பிராடு. அய்யா மன்சு எவ்வளவு உடைஞ்சிருந்தால் இப்படிப் பேசுவாரு. இவரு கிட்டயே பிராடுத்தனம் பண்ணிட்டியேடா.. வெளில வா."

"இந்த விஷயம் வெளில போகப்படாது. யார் கிட்டயும் சொல்லப்படாது."

"ஆமாம் ஸார். இங்க ஆளை விக்கிற பசங்க ஜாஸ்தி." பியூன் அன்பர்கள் போய்விட்டார்கள். சரவணனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இந்த சிதம்பரத்தால் எழுந்துள்ள பிரச்சினைக்கு எப்படிப் பதிலளிப்பது? அவனை எப்படிக் காட்டிக் கொடுப்பது?

சரவணன், அன்னத்தின் பெர்சனல் பைலைப் புரட்டினான். இறுதியில், அவன் கொடுத்த மெமோ இருந்தது. இதை மேலிடத்திற்கு எடுத்துச் சொன்னால், அவன் காண்டிராக்டருக்கு அனுப்பிய தாக்கீதுகள் உறுதிப்படும். சரவணன் யோசித்தான். அப்படி எழுதினால் அவளுடைய மெமோவையும் கிழிக்க முடியாது. அவளும், அப்புறம் உத்தியோகத்தில் தேற முடியாதே. மற்றவங்களுக்கு டில்லியில் ஆட்கள் உண்டு. இவளுக்கு இவள்தானே. அதுக்கு என்ன செய்யுறது? தனக்கும் போகத்தான் தானம். நானே மாட்டிக் கொள்ளும்போது, யார் மாட்டினால் என்ன. மாட்டாவிட்டால் என்ன?

சரவணன், சிந்தனையுள் மூழ்கினான். நீண்ட நேரத்திற்குப் பிறகு, ஒரு முடிவுக்கு வந்ததுபோல், தலையை ஒரு தடவை ஆட்டிவிட்டு, அன்னத்திற்குக் கொடுக்கப்பட்ட மெமோவில் மடமடவென்று எழுதினான். பிறகு, எழுதிமுடித்த கையோடு இன்டர்காமில், செளரிராஜனுடன் பேசினான்.