உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடையாளங்கள்

தோழர் வலம்புரிஜான் எழுத்தாக... ('மெட்டி” இதழ் 1983 நவம்பர்)

கதைதான் ஒரு எழுத்தாளனை கவிழ்ந்து போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பேர் வாய்ந்த எழுத்தாளராக இருந்தாலும், சீர் வாய்ந்த கதையாக இல்லாவிட்டால், ஒரு எழுத்து தன்னை எழுந்து நடக்கவிட்ட எழுத்தாளனுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்காது. சு. சமுத்திரம் போன்ற சில எழுத்தாளர்கள், மக்களின் மன மண்டபங்களில் மகுடாதிபதிகளாக இருப்பதற்குக் காரணம், அவர்களின் எழுத்து மனிதனைத் தொடுகிறது. தொட்டு அவனைத் தாக்குகிறது என்பதுதான். அவரது மைக்கூட்டிற்குள் நீலம் பூத்து நிமிருகிறபோது, மண்ணுக்காக குரல் கொடுக்கிற அவரது மகத்துவம்தான் தாள் மேடைகளில் தளிர்நடை போடுகிறது. எழுத்து என்ற வேள்வித்தீயில் எழுந்திடும் நீலப்பூவாக இருக்கிறவர் சு. சமுத்திரம் அவர்கள்.

நான் விரும்பி அடைந்த நண்பர்களில் அவர் முதல் வரிசை மனிதர். ஒரு கவிஞனுக்குரிய வெள்ளை மனமும், வேகப் பிளிறலும், ஒரு சமுதாய விஞ்ஞானிக்கு வாய்க்க வேண்டிய அடங்காத சினமும், ஆழமான அணுகலும், பாரம் சுமக்கிற மக்களுக்காக தனது எழுதுகோலைப் பகிர்ந்து கொள்கிற பக்குவமும், நீண்ட நாள் நிலைத்திருக்கப்போகிற தீர்க்க தரிசனமும் எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் அடையாளங்களாகும்.

அவரது எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் பெரிதான இடைவெளி ஒன்றும் இல்லை. கனமான நாவல்களுக்காக காலம் அவரைக் கெளரவப் படுத்தும்.

நுரைக்கிற சமுத்திரத்தின் நூதனமான கதை இது!

"கலைமகளின் வாழ்த்தாக... (1994-ஜனவரி)

"பமுத்த பலாவுக்குப் பரிசு’

இந்த ஆண்டு சாகித்திய அக்காதெமிப் பரிசு, வேரில் பழுத்த பலா என்ற தமிழ் நூலுக்குக் கிடைத்திருக்கிறது. பலாவுக்கே இனிப்பும் சுவையும் மிகுதி. அதுவும் வேரில் பழுத்தால் சுவைக்குக் கேட்க வேண்டுமா? இரண்டு குறுநாவல்கள் இணைந்த நூல் இது. இதனை எழுதியவர் அன்பர் திரு. சு. சமுத்திரம் அவர்கள். தொலைக்காட்சி, வானொலித்துறையில் பணியாற்றும் திரு. சு. சமுத்திரம் அவர்களின் எழுத்தில், சமூகத்தின் அடித்தள மக்கள், போராடியும், தங்கள் நியாயமான உரிமைகளைப் பெற முடியாமல் அவதிப்படும் நிலையைக் காணலாம். கிராமப்புற மக்களின் வஞ்சனையற்ற உழைப்பு, பேச்சு, செயல்களையும், நகர்ப்புற மக்களின் டாம்பீகப் போலித்தனத்தையும், இவர் எழுத்துக்கள் பிரதிபலிக்கும். பழகுவதற்கு இனிய நண்பரான இவர், மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறோம்.