உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்/மனுவும் கீதையும் ஒரு குலத்துக்கு ஒரு நீதி

விக்கிமூலம் இலிருந்து


3


மனுவும் கீதையும்: ஒரு குலத்துக்கு ஒரு நீதி


மனு நீதியின் தோற்றம் பற்றியும் அது ஒரு குலத்துக்கொரு நீதியாக மாற்றம் பெற்றது பற்றியும் அயோத்திதாசர் கூறும் வரலாற்றுப் பின்னணியும் மறு ஆய்வின்றிப் புறக்கணிக்கத் தக்கதன்று.

பூர்வ இந்திய தேச பெளத்தர்கள் மனுமக்கள் சீர்பெறுமாறு வரைந்து வைத்துள்ள நூலுக்கு மனுதன்ம நூலென்று கூறப்படும். அவற்றுள் வாக்கால் போதிக்கும் தன்மமும் கரங்களால் ஈயும் தன்மமும் ஆகிய இரு வகையுண்டு. முதலாவது மனுமக்களுள் வஞ்சினம், பொறாமை, பொருளாசை, கொலை, களவு, பொய், மதுவருந்தல், விபச்சாரம் முதலிய துற்கிருத்தியங்களே நிறைந்தள்ள கூட்டத்தார்க்கு நன் மார்க்கங்களைப் போதித்து நல்வழியில் நடத்தி நல்ல சுக வாழ்க்கையாம் நித்திய சுகம் பெறச் செய்யும் தன்மத்திற்குப் போதனா தன்மமென்றும்; இரண்டாவது கூன், குருடு, சப்பாணி, பிணியாளர், திக்கற்றோர், உழைத்துச் சீவிக்க சக்தியற்றோர், பசியாளர், இல்லறந்துறந்த பெரியோர் முதலியோருக்குப் பொருளுதவி செய்து அன்னமிட்டு ஆதரிப்பது ஈயும் தன்மமென்றும் கூறப்படும்.

இத்தகைய தன்மத்தையே மகட பாஷையில் புத்த தம்மாவென்றும், சகட பாஷையில் சத்திய தருமமென்றும், திராவிட பாஷையில் மெய்யறமென்றும் வழங்கி வந்தார்கள். இத்தன்மத்தை மனுமக்களுக்கே போதித்து அவரவர்கள் இதயத்தில் நன்கு பதியுமாறு ஒலைகளிலும் செப்பேடுகளிலும் பொன்னேடுகளிலும் சிலைகளிலும் வரைந்துள்ள

வற்றிற்கு மனுதன்ம நூலொன்றும் மனுதரும சாஸ்திரமென்றும் மனு நீதியென்றும் வழங்கலாயிற்று (அலாய்சியஸ் II 442).

மனுவென்னும் மகாஞானியார் பிரஜாவிருத்தி யென்னும் அரயனுக்குப் போதித்த சத்திய தன்மமும் அதை அனுசரித்து நடந்ததினாலடைந்த சுகபலனையும் விளக்கிய நூலுக்கு மநுஸ்மிருதியென்றும் மநுதன்ம சாஸ்திரமென்றும் கூறப்படும்.

இத்தகையாய் வழங்கி வந்த பெளத்த தன்ம நூல்களும் அதனதன் சாராம்ஸங்களும் அஞ்ஞானிகளாகிய இவ்வேஷப் பிராமணர்களுக்கு விளங்காதிருப்பினும் தங்கள் தங்கள் வேஷப் பிராமணச் செயலை விருத்தி செய்து சுயப் பிரயோசனத்தில் சுகிப்பதற்கு மேற்கூறிய பதினெட்டு இஸ்மிருதிகளாம் தன்ம சாஸ்திரங்களின் சாராம்சங்களை முற்றும் அறிந்தவர்கள் போல் மநுஸ்மிருதியென்றும் மநுதன்ம சாஸ்திரமென்றும் ஓர் அதன்ம நூலை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

தங்களுடைய அதன்ம நூலையே தன்ம நூலாக ஒப்புக் கொள்ள வேண்டுமென்னும் அட்டவணையைப் போட்டுக் கொண்டு தங்கள் சுயசீவனத்திற்கான வழிகளையெல்லாம் எழுதி வைத்துக் கொண்டார்கள். அவற்றுள்ளும் வருணமென்னும் மொழி நிறத்தைக் குறிக்கக்கூடியது என்று உணராது அவைகளையே ஒவ்வோர் சாதிகளாக எழுதியுள்ளார்கள் . . .

மனுமக்களின் ஒற்றுமைக்குக்கேடாய வருணாசிரமங்களைச் சொல்லும்படி ஓர் ரிஷியைக் கேட்டதாகவும், அவர் வருணாசிரம தன்மங்கள் ஓதியதாகவும் வரைந்து வைத்துள்ளார்கள். உலகத்தில் தோன்றும் பொருட்களும் அழியும் பொருட்களும் பிரத்தியட்ச காட்சியாயிருக்க வருணாசிரம தோற்றத்தை மட்டிலும் ஒருவன் கேட்கவும் மற்றவன் சொல்லவும் ஏற்பட்டது மிக்க விந்தையேயாம். ஈதன்றி தன்மமென்னும் மொழியானது சீவராசிகளீராக மனுமக்கள் வரை பொதுவாயுள்ளதேயாம் (அலாய்சியஸ் I 672-3).

அதில் கூறியுள்ள அனுலோம சாதி, பிரதிலோம சாதி, அந்தராள சாதி, பாகிய சாதியானோர் ஒருவருந் தோன்றாமல் அந்நூலில் கூறியில்லாத முதலியார் சாதி, நாயுடு சாதி, செட்டியார் சாதி, நாயகர் சாதி முதலியோர் தோன்றி விட்டார்கள் (அலாய்சியஸ் I 674).

கொழுத்த பசுக்களை நெருப்பிலிட்டுச் சுட்டு எதேஷ்டமாகத் தின்பதற்குப் பிரம்மாவானவர் பசுக்களை எக்கியத்திற்கே சிருஷ்டித்திருக்கிறாரென்று இம்மனு நூலில் எழுதி வைத்துக் கொண்டவர்கள் பெளத்தர்களது தேசத்தில் பசுவைக் கொல்லும் எக்கியத் தொழிலை மறந்தே விட்டு விட்டார்கள். இவர்கள் எழுதியுள்ளபடி பிரம்மாவானவர் எக்கியத்திற்கென்றே பசுக்களை

சிருஷ்டித்துள்ளது எதார்த்தமாயின் இவர்களும் விட்டிருப்பார்களோ, பிரும்ம சிருஷ்டி கருத்தும் பழுதாமோ, இல்லை. தங்கள் புசிப்பின் பிரியத்தை பிரமன் மீதேற்றி வரைந்து வைத்துக் கொண்ட போதிலும் கொன்று தின்னாமையாகும் பெளத்தர்களது மத்தியில் அன்னோர் பிரமத்தின் கருத்தும் அடியோடு அழிந்து போய்விட்டது.

பல பாஷையோருள்ளும் பல தேசத்துள்ளோரும் பல மதத்தோருள்ளும் வேஷப் பிராமணர்கள் தோன்றிவிட்டபடியால் அவரவர்கள் மனம் போல் எழுதிக் கொண்ட வேதங்களும், மனம் போல் எழுதிக் கொண்ட வேதாந்தங்களும், மனம் போல் எழுதிக்கொண்ட புராணங்களும், மனம் போல் எழுதிக் கொண்ட தன்மங்களும், மனம்போல் எழுதிக் கொண்ட கடவுளர்களும் ஒருவருக்கொருவர் ஒவ்வாது மாறுபட்டுள்ளபடியால் ஒரு வகுப்பார் எழுதிக் கொண்ட கட்டளைகள் மறு வகுப்பார்க்கு ஒவ்வாமலும், ஒரு வகுப்பார் தெய்வம் மறுவகுப்பார்க்கு ஒவ்வாமலும் கலகங்களுண்டாகி வேறுபடுவதுடன் நூதனமாக ஏற்படுத்திக் கொண்ட மனுதன்ம சாஸ்திரத்தையும் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாதும், சாதி தொடர் மொழிகளைச் சேர்த்துக் கொள்ளாதும், சணப்பனார் பூணுநூல், ஆட்டு மயிரின் பூணு நூற்களைத் தரித்துக் கொள்ளாததும் அதனுள் விதித்துள்ள தண்டனைகளை ஏற்றுக் கொள்ளாதும் நீக்க விட்ட போதினும் மநுதன்ம நூல் மனுதன்ம நூலென்னும் பெயரினை மட்டிலும் வழங்கி வருகின்றார்கள் (அலாய்சியஸ் I 675).

மனு ஸ்மிருதி, மானவதர்மசாஸ்திரம் என்று இரண்டு பெயர்களால் வழங்கப் பெறும் வட மொழி நூல் 2,685 செய்யுட்களைக் கொண்டது; இந்து தருமத்தையும் இந்துக்கள் வாழும் நெறியையும் பற்றிப் பேசுவது. இந்த அண்டத்தின் தோற்றம், இவ்வுலக உயிர்களின் படைப்பு, சமுதாய அமைப்பு, பிராமணர்களின் பெருமை, இந்து சமயச் சடங்குகள்,வேதம் ஓதுதல், குருவைப் போற்றுதல், இல்லறத்தாரின் கடமைகள், இல்லறத்தார் மேற்கொள்ள வேண்டிய சடங்குகளும் அவற்றைச் செய்ய வேண்டிய முறைகளும், தேவர்களுக்குச் செய்ய வேண்டிய வேள்விகள், பிதுர்க்கடன், எண்வகைத் திருமணங்கள், வேதம் பயிலும் பிராமண இளைஞர் வாழ்க்கை, இல்லறத்தார் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள், துறவறத்தாரின் கடமைகளும் வாழும் நெறியும், அரசர்களின் உயர்வும் அவர்கள் ஆட்சி செய்ய வேண்டிய முறையும், அமைச்சர்கள், தூதுவர், அரசரின் அன்றாட வாழ்க்கை, அரசர் நீதி செய்தல், அரசர் தண்டிக்க வேண்டிய குற்றங்கள், பெண்களின் இயலாமை, நால்வருணத்தைச் சேர்ந்த மனைவியரின் நிலை, மரணச் சடங்குகளும் மைந்தர்களின் பங்கும், நால் வருணங்கள், அவற்றின் உயர்வு தாழ்வுகள், சூத்திரர்களின் கடமைகள், பாவங்களும் பிராயச் சித்தங்களும், வினைகளால் விளையும் பயன்கள், ஆன்மாவின் தன்மை, மறுபிறவிகள், வேதம் ஓதுதலின் மதிப்பு, தன்னைப் பற்றிச் சிந்தித்தல் ஆகியவை பற்றியெல்லாம் மனுநீதி விளக்கமாக தொடர்பற்ற முறையில் முரண்பாடுகளுடன் உரைக்கும்.

மனுநீதி என்று மனு என்பவரின் பெயரால் அழைக்கப் பட்டாலும் அது பலரால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் வருணாசிரம தருமத்தைக் காப்பதே அதன் தலையாய நோக்கென்றும் அதில் மூன்றில் ஒரு பங்கு அல்லது பாதி மகாபாரதத்தில் அப்படியே இருக்கிறதென்றும் அவற்றுள் எது மூலம், எது பின்னால் எழுதப் பெற்றது என்பதைக் கண்டறிய இயலவில்லையென்றும் அது பிராமணரால் எழுதப்பட்டது என்பதோடு பிராமணருக்காக பிராமணரின் நலன் கருதி எழுதப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதென்றும் அன்னார் தங்களைப் பண்டை இந்தியாவின் மூளைகளாகவும் வாய்களாகவும் கருதி அதனை உறுதி செய்து கொள்ளப் பயன்படுத்திக் கொண்ட நூலென்றும், பல அடிப்படைக் கொள்கைகள் பற்றி அதன் முரண்பட்ட கருத்துகள் சொல்லப்பட்டிருக்கின்றனவென்றும் மனுநீதியின் பகுதிகள் வெவ்வேறு காலங்களில் பல நூற்றாண்டுகளாகச் சேர்க்கப் பட்டதனால் இது நிகழ்ந்ததென்றும் சட்டங்களைப் பற்றிய பகுதிகள் இறுதியாகச் சேர்க்கப்பட்டவையென்றும் அது கூறும் சட்டங்கள் என்றும் நடைமுறைக்கேற்றவையாய் இருந்திருக்க முடியாதென்றும் அந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வெண்டி டோனிகர் (Wendy Doniger) எனும் சிகாகோ பல்கலைக்கழகத்துப் பேராசிரியராகப் பணிபுரிந்த அம்மையார் தமது நீண்ட ஆய்வு முன்னுரையில் எடுத்துரைப்பார்.

மனுநீதி இவ்வுலக வாழ்க்கை பற்றி என்ன நினைக்கிறதென்பதை அது மனிதவுடலைப் பற்றிக் கூறுவதிலிருந்து அறியலாம்.

“ஒரு மனிதன் முடை நாற்றம் வீசும், துன்பத்திற்கு உட்படுத்தப் பெறும், நிரந்தரமற்றதுமான உயிர்களின் குடியிருப்பாகிய உடலை உதறித் தள்ளிவிட வேண்டும். அது சிறுநீர், மலம் ஆகியவற்றால் நிரம்பியது; முதுமையாலும் துயரத்தாலும் பீடிக்கப்படுவது; நோயால் அலைக்கழிக்கப்படுவது; வெறி உணர்வால் மாசுபடுத்தப்படுவது; எலும்புகளே உத்தரங்களாகவும் தசை நாண்களே கட்டுதளைகளாகவும், சதையும் குருதியும் அரை சாந்தாகவும், தோலே கூரையாகவும் கொண்ட வீடே மனிதவுடலாகும்” (6.76-7). மனு நூல் கூறும் நீதி எக்காலத்துக்கும் எவ்விடத்திற்கும் எம்மனிதர்க்கும் பொருந்துமாவென்பது பற்றி ஏ.கே. ராமானுஜன் கூறும் கருத்து நோக்கற்பாலது.

காண்ட்டில் (Kant) ஒரு சிறு பகுதியைப் படித்துவிட்டு மனுவைப் படித்தோமானால் மனுவிற்கும் உலகளாவிய பரந்த நோக்கிற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு பெரியது என்ற அதிர்ச்சியால் தாக்கப்படுவோம். நீதிகளை விதிப்பதற்கான மாந்தர் யாவர்க்கும் பொதுவான மனித இயல்பு என்ற ஒன்று உண்டென்று மனு அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. நீதி என்றாலே யார், யாருக்கு, எப்பொழுது, என்ன செய்தார் என்பதையெல்லாம் பொறுத்தே முடிவு செய்யப்பட வேண்டியது என்பது மனுவின் முடிவு. பெர்னார்டு ஷாவின் “மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகின்றாயோ அதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே. அவர்களுடைய விருப்பு வெறுப்புகள் வேறாக இருக்கலாம்” எனும் கூற்று மனுவின் எண்ணத்திற்கு நெருக்கமானதாகும். இருவருக்குமுள்ள ஒரு வேறுபாடு ஷா மற்றவரின் விருப்பு வெறுப்புகள் வேறாக இருக்கலாம் என்று எண்ண, மனுவோ மற்றவர்களுடைய இயல்பும் சாதியும் வேறாக இருப்பதால் அவர்களுக்கிழைக்க வேண்டிய நீதி வேறாகும் என்று எண்ணினார் என்பதே (டானிகர் 46).

மனு கூறும் விதிகளும் சட்டங்களும் வருணாசிரம தருமத்தின் அடிப்படையில் சூழலுக்கேற்ப மாறுபடும். யாவர்க்கும் எக்காலத்திற்கும் பொதுவானதென்று இங்கு ஏதுமில்லை.

மக்களுள் ஒரு பாதியான பெண்ணினத்திடம் மனுவிற்கு எள்ளளவும் அன்போ, நம்பிக்கையோ, மரியாதையோ கிடையாதென்பதற்குப் பல சான்றுகளைக் காணலாம். ஆண்களின் அழகிய தோற்றம் பற்றியோ இளமை பற்றியோ பெண்கள் கவலைப்படுவதில்லை. ஓர் ஆண் கிடைத்துவிட்டால் அவன் அழகனாயினும் அருவருப்பான தோற்றத்தானாயினும் பரவாயில்லையென்று அவனோடு உடலுறவு கொண்டு மகிழ்வர். எவ்வளவு கவனமாகக் கண்காணிக்கப்பட்டாலும் பெண்கள் யாவரும் சலன புத்தி கொண்டவர்களாகவும் இயற்கையிலேயே அன்பற்றவர்களாகவும் இருப்பதால் பரத்தையர் போல் ஆண்களைத் துரத்திச் சென்று தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்வர். பெண்களின் இயல்பு அவர்கள் பிரமாவால் படைக்கப்பட்டபொழுதே இவ்வாறு அமைந்ததால் இதை உணர்ந்து ஓர் ஆண் அவர்களைத் தன்னால் முடிந்த அளவு காவலில் வைத்திருக்க வேண்டும். படுக்கை, இருக்கை, அணிகள், காமம், சினம், வஞ்சகம், வன்மம், கெட்ட நடத்தை ஆகியவையே பெண்களுக்கென்று மனு ஒதுக்கியவை (9. 14-17).

மனுநீதியில் ஆங்காங்கே ஓரிரண்டு இடங்களில் பெண்களைப் பற்றி உயர்வாகக் கூறப்பட்டிருப்பினும் ஒன்பதாம் அத்தியாயத்தின் முதல் இருபத்தாறு செய்யுட்களே மனுநீதி காலத்துச் சமுதாயத்துக் கருத்துக்களாகக் கொள்ளப்படலாமென்று சுதிர் கக்கர் (Sudhir Kakar) கூறுவார். தாய்நிலையில் போற்றப்படுகின்ற பெண் கணவனுக்கு அடங்கிய மனைவியாக எக்கொடுமைகளையும் பொருட்படுத்தாது ஆண் குழந்தையைப் பெற்றுக் கொடுக்கும் பணியைச் செய்கின்ற வரையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறாள். பொதுவாக, அவளைக் காமப் பொருளாகவே மனுநீதி கருதுகிறது.

ஆண்கள் பெண்டிரை இரவும் பகலும் தங்கள் கட்டுப்பாட்டில் தங்கள் துணையோடு இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெண்ணைக் குழந்தையாக இருக்கும்போது அவளுடைய தந்தையும் இளையவளாக இருக்கும்போது கணவனும் முதுமையில் மைந்தர்களும் தம் காவலில் இருத்துகிறார்கள். எப்பெண்ணும் விடுதலைக்குத் தகுதி உடையவள் அல்லள் . . . பெண்கள் எவ்விதமான கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாகாமல் காக்கப்பட வேண்டியவர்கள். சிறிய கெட்ட பழக்கங்கள் அவர்களுக்கு ஏற்படவும் விடக்கூடாது. ஏனெனில் காவல் இல்லாத பெண்கள் பிறந்த குடும்பத்திற்கும் புகுந்த குடும்பத்திற்கும் துயரத்தை உண்டாக்குவார்கள். நான்கு வருணங்களைச் சார்ந்தவர்களும் இதைத் தலையாய கடமையாகக் கருதுவதால், நலிந்த கணவர்களும்கூட தங்கள் மனைவியரைக் கவனமாகக் காக்கிறார்கள். இவ்வாறு செய்வதால் அவர்கள் தங்கள் சந்ததியாரையும், மரபுகளையும், குடும்பத்தையும், கடமைகளையும், தங்களையும் காத்துக் கொள்கிறார்கள் . . . ஒரு பெண் யாரோடு கூடுகின்றாளோ அவனைப் போன்ற ஒரு மகனையே பெற்றுத் தருகிறாள்; எனவே தன்னுடைய சந்ததியைத் தூய்மையாக வைத்துக் கொள்ள ஒருவன் தன் மனைவியைத் தன் காவலில் வைத்துக் கொள்ள வேண்டும். வலிமையால் மட்டும் பெண்களைத் தவறிழைக்காமல் வைத்திருக்க முடியாது. கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கையாண்டால் மட்டுமே அதனைச் செய்ய முடியும்: பணம் சேர்க்கவும் செலவு செய்யவுமாக அவள் எப்பொழுதும் ஓய்வின்றி வைக்கப்பட வேண்டும். தூய்மை செய்யும் பணியிலும் தன் கடமையைச் செய்வதிலும் சமையல் செய்வதிலும் தட்டுமுட்டுப் பொருள்களைப் பார்த்துக் கொள்வதிலுமாக அவள் பொழுது கழிய வேண்டும். தங்களுடைய வேலையை ஒழுங்காகச் செய்யக்கூடிய ஆட்கள் இருக்கும் இடத்தில் கூட, பெண்களை நம்பிக் காவலில் வைக்க முடியாது. தங்களையே காத்துக் கொள்ளும் பெண்கள்தான் நல்ல காவலில் இருப்பவர்கள். குடிப்பழக்கம், தீயவரோடு சேருதல், தங்கள் கணவரிடமிருந்து பிரிந்திருத்தல், ஊர் சுற்றுதல், தவறான நேரத்திலும் தவறான இடத்திலும்

தூங்குதல், வேற்றார் இல்லங்களில் தங்குதல் ஆகிய ஆறும் பெண்களைக் கெடுத்துவிடும் . . . வேதப் பாடல்களோடு கூடிய சடங்கு ஏதும் பெண்களுக்குக் கிடையாது. இது உறுதியாக நிலைநாட்டப்பட்ட சட்டமாகும். வலிமையும் வேதப் பாடல்களும் இல்லாததால் பெண்கள் ஏமாற்றுக்காரர்கள். உறுதியாக நிறுவப்பட்ட சட்டம் இதுவாகும் (9. 2-18).

பெண்களைத் திருமணம் செய்து கொடுத்தல் பற்றியும் தத்து எடுத்துக் கொள்ளுதல் பற்றியும் பல்வேறு வகையான குற்றங்கள் புரிந்தவர்களைத் தண்டித்தல் பற்றியும் பேசும் இடங்களிலெல்லாம் பெண் ஆணினும் மிகத் தாழ்ந்தவளாகவும் கீழ் வருணங்களோடு ஒத்த சமுதாய நிலை உடையவளாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறாள். ஆண்குழந்தை பெற்றவனுக்கே எல்லாச் சிறப்பும் அளிக்கப்படுகிறது. “ஒரு மனிதன் ஆண்மகன் மூலமாக உலகங்களையெல்லாம் வெற்றி கொள்கிறான்; பேரன் மூலமாக நிலைபேறுடைமையைப் பெறுகிறான்; பேரனுடைய மகன் மூலம் கதிரவனின் உச்சியை அடைகிறான். ஆண் குழந்தையே ஒருவனைப் ‘புத்’ எனும் நரகத்திலிருந்து காப்பதால்தான் இறைவனே ஆண்குழந்தையைப் ‘புத்திரன்’ என்று அழைத்தான் (9.137). ஒருவனின் மனைவி பலவிடங்களில் ஒருவனின் நிலம் என்றே சுட்டப்படுகிறாள். ஒருவனுக்கு ஒரு மனைவி என்னும் நெறி எங்கும் பேசப்படவில்லை. வேள்வி செய்யும் பிராமணன் அவனுடைய வருணத்தைச் சார்ந்த பல பெண்களை மனைவியராகக் கொள்ளலாம்.

எந்தவொரு நீதியானாலும் குற்றத்திற்குத் தண்டனையானாலும் உரிமையானாலும் கடமையானாலும் நன்மை, தீமையானாலும் நான்கு வருணங்களின் அடிப்படையிலேயே வேறுபடுத்திப் பேசும் மனு “பிராமணகுரு பிறப்பாலேயே தேவர்களுக்கும்கூட தேவன், இந்தவுலக மக்களுக்கு ஒரே அதிகாரி. இந்த விதிக்கு வேதமே அடிப்படை ஆதாரம்” (11.85) என்பார். நூலின் தொடக்கத்திலேயே தவத்திலிருக்கும் மனுவை முனிவர்கள் அணுகி “நான்கு வருணங்களின் கடமைகளையும் இரண்டு வருணங்களுக்குப் பிறந்தார்க்குமுள்ள கடமைகளையும் வரிசையாக ஒழுங்குபடுத்திச் சொல்லுங்கள்” (1.2) என்று கேட்கிறார்கள். உலக மக்களின் தோற்றத்தைச் சொல்லும்போது, “யாவரும் பல்கிப் பெருகி நலம் பெறுவதற்காக இறைவன் தன் வாயிலிருந்து பிராமணனையும் கைகளிலிருந்து சத்திரியனையும், தொடைகளிலிருந்து வைசியனையும், கால்களிலிருந்து சூத்திரனையும் படைத்தார்” (1.31) என்றும் அவர்களுக்கான தொழிலைச் சொல்லும்போது “கற்றல், கற்றுத்தரல், தமக்காகவும் பிறருக்காகவும் வேள்வி செய்தல், கொடுத்தல், கொள்ளல் ஆகியவை பிராமணருக்கும் தன்னுடைய குடிகளைக் காத்தல், கொடுத்தல், வேள்விகளை நடப்பித்தல், கற்றல், புலனின்பப் பொருள்களுக்கு அடிமையாகாதிருத்தல் ஆகியவை அரசர்களுக்கும் கால்நடைகளைக் காத்தல், கொடுத்தல், வேள்விகளை நடப்பித்தல், கற்றல், வாணிபம் செய்தல், பணம் கடன் கொடுத்தல், உழுதொழில் ஆகியவை வைசியர்க்கும் ஏனைய மூன்று வகுப்பார்க்கும் வெறுப்பின்றி அடிமையாய்ப் பணிசெய்தல் மட்டும் சூத்திரர்க்கும் ஏற்படுத்தப் பட்டவையாகும்” (1.87-91) என்று மனுநூல் விவரிக்கும். அது பல பொருள்களைப் பற்றியதாயினும் எங்கும் அடிக்கோடிட்டுக் காட்டுவது பிராமண வருணத்தாரின் உயர்வையே.

பிராமணன் பிறக்கும்போதே சமயம் எனும் புதையலைக் காப்பதற்காக வாழும் உயிர்கள் எல்லாவற்றிற்கும் தலைவனாக உலகின் உச்சியில் பிறக்கிறான். இந்த அண்டத்தில் இருக்கும் எல்லாப் பொருள்களும் அவனுக்கே சொந்தம்; அவனுடைய பெருமை காரணமாகவும் உயர்ந்த பிறப்பு காரணமாகவும் இதற்கான தகுதி அவனுக்கு உண்டு. பிராமணன் தனக்குச் சொந்தமானதையே சாப்பிடுகிறான்; தனக்குச் சொந்தமானதையே அணிகிறான்; தனக்குச் சொந்தமானதையே கொடுக்கிறான். மற்றவர்கள் பிராமணனின் கருணையினாலேயே சாப்பிடுகிறார்கள் . . .

கற்றறிந்த பிராமணனே மனுவின் உபதேசத்தைக் கவனமாகப் படித்து அவனுடைய மாணவர்களுக்கு ஒழுங்காகக் கற்பிக்க வேண்டும். இதை வேறு யாரும் செய்யக் கூடாது (1.99-101)

பிராமணன் ஆர்யாவர்த்தத்திலுள்ள நாடுகளிலேயே வாழ முயல வேண்டும்; சூத்திரன் உணவுக்கு வழியில்லையானால் எந்த நாட்டிலும் வாழலாம் (2.24)

பெயர் வைப்பதில்கூட வேறுபட்ட விதிகள் கடைப்பிடிக்கப் பெற வேண்டும். பிராமணனுடைய பெயர் நற்குறியுடைய சொல்லையும் சத்திரியனுடைய பெயர் ஆற்றலைச் சுட்டும் சொல்லையும் வைசியனுடைய பெயர் செல்வத்தைக் காட்டும் சொல்லையும் பெற்றிருக்க வேண்டும். சூத்திரனுடைய பெயரே அருவருப்பை உண்டாக்குவதாக இருக்க வேண்டும். (2.31).

அரசனை விடவும் பிராமணன் உயர்ந்தவன், மரியாதைக்குரியவன் என்பது மீண்டும் மீண்டும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பத்து வயதான பிராமணனும் நூறு வயதான அரசனும் தந்தையும் மகனுமாகக் கருதப் பெற வேண்டும். இவருள் பத்து வயதான பிராமணனே தந்தை (2.135)

ஒருவன் மணந்து கொள்ளும் பெண் அவனுடைய வருணத்தைச் சார்ந்தவளாக இருக்க வேண்டுமாயினும் பிராமணன் இரண்டாவது மூன்றாவது மனைவியாக அரச குலத்திலிருந்தோ, வைசிய குலத்திலிருந்தோ பெறலாம். தாழ்ந்த சாதியிலிருந்து மனைவியைக் கொள்ளும் பிராமணன் அவனுடைய குடும்பத்தையும் சந்ததியாரையும் சூத்திரர் நிலைக்குத் தாழ்த்துகிறான். சூத்திரப் பெண்ணின் எச்சிலை உண்டவன், அவளுடைய மூச்சுக் காற்று மேலே பட்டவன், அவளிடம் குழந்தை பெற்றவன் ஆகியோர்க்குக் கழுவாய் இல்லை (3. 12-19).

பலவிதமான பொருளற்ற விதிகளும் மூட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவைகளும் கீழ்வருணத்தாரை அச்சுறுத்தும் தண்டனைகளும் பல நிகழ்ச்சிகளோடு தொடர்புபடுத்திச் சொல்லப்படுகின்றன.

பிராமண குரு உண்ணும்போது சண்டாளனோ, பன்றியோ, சேவலோ,நாயோ வீட்டு விலக்கான பெண்ணோ, ஆண் தன்மையற்றவனோ பார்க்கக் கூடாது. வேள்விச் சடங்கையோ, விருந்தையோ, தேவதை வழிபாட்டையோ இவர்களில் யார் பார்த்தாலும் அவை கெட்டுவிடும். . . . மூதாதையர்க்குச் செய்யப்படும் சடங்கின்போது தரையில் விழுந்த உணவு போக்கிரித்தனமும் வஞ்சனையுமில்லாத அடிமைக்குரியதாகக் கருதப்படுகிறது (3. 239-46).

பிராமணர்கள் ஊன் உணவு கொள்ளலாமென்று பலவிடங்களிலும் கொள்ளக்கூடாதென்று ஓரிரண்டு இடங்களிலும் சொல்லப்படுவதால் பின்னைய பகுதிகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட இடைச் செருகல்கள் என்று அறிஞர் கருதுவர்.

எள், அரிசி, வாற்கோதுமை, அவரை, தண்ணீர், கிழங்குகள், பழங்கள் ஆகியவை விதிகளின்படி மூதாதையர்க்கு அளிக்கப்பட்டால் அவை அவர்களுக்கு ஒரு மாதத்திற்குத் திருப்தி அளிக்கும். மீன் கொடுக்கப்பட்டால் இரண்டு மாதங்களுக்குத் திருப்தி அடைவர். மான் கறி மூன்று மாதங்களுக்கும் ஆட்டுக்கறி நான்கு மாதங்களுக்கும் பறவைகளின் கறி ஐந்து மாதங்களும் ஆட்டுக்கறி ஆறு மாதங்களுக்கும் புள்ளிமான் கறி ஏழு மாதங்களுக்கும் கருநிற மறிமான் கறி எட்டு மாதங்களுக்கும் சிறுமான் கறி ஒன்பது மாதங்களுக்கும் ஆண் பன்றி, எருமை ஆகியவற்றின் கறி பத்து மாதங்களுக்கும் அவர்களுக்கு நிறைவளிக்கும் (3. 267-271)

மூன்றாம் அதிகாரத்தில் இவ்வாறு கூறும் மனுநூல் ஐந்தாம் அதிகாரத்தில்,

அனுமதி அளிப்பவன், விலங்கைக் கொல்வோன், கறியை வெட்டுவோன், அதனை வாங்கி விற்போன், அதனைச் சமைப்போன், பரிமாறுபவன், உண்ணுவோன் ஆகிய யாவரும் கொலை செய்தவர்கள் ஆவார்கள்.

. . . நூறு ஆண்டுகளுக்குக் குதிரை வேள்வி செய்வோன், ஊன் உண்ணாதவன் ஆகிய இருவர்க்கும் ஒரே அளவு நற்பலன்கள் கிடைக்கும் (5. 51–3).

என்று கூறும் கொல்லாமை பற்றிய கருத்துகள் பிராமணர்கள் ஊன் உண்ணாமையை அடிப்படையாக வைத்து உயர்ந்தோர் என்று கூறிக்கொண்ட பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்று மேலை அறிஞர் சுட்டிக் காட்டுவர்.

ஊன் உணவே தலைசிறந்த உணவு என்றுவேதம்சொல்வதையும் உணவும் உண்போரும் வேதத்தில் முக்கிய இடம் பெறுதலையும் பல அறிஞர்கள் எடுத்துக்கூறியுள்ளனர். (டானிகர் 24-37) இந்துக்கள் பேசும் ‘மச்ச நியாயம்’ வேதக் கூற்றுகளிலிருந்து பெறப்பட்டதாகும். சின்ன மீனைப் பெரிய மீன் விழுங்குவது போல் மனிதர்கள் விலங்குகளையும், விலங்குகள் தாவரங்களையும், தாவரங்கள் மழை நீரையும் உண்ணுவது பற்றியும் வேதம் குறிப்பிடுகிறது (டானிகர் 25). இதனை மனு ஒரிடத்தில் தெளிவாகச் சொல்வார்.

நகராதவை நகர்பவைகளுக்கு உணவாகும். நச்சுப்பல் இல்லாதவை நச்சுப்பல் உள்ளவைகளுக்கு உணவாகும். கையுள்ளவற்றிற்குக் கையில்லாதவை உணவாகும். அச்சமற்றவர்க்குக் கோழைகள் உணவாவர் (டானிகர் 5.29).

பெண்களைப் பற்றிப் பல இடங்களில் இழிவாகப் பேசும் மனுநீதி இரண்டாரு இடங்களில் அவர்களே குடும்பத்திற்கு அணிகலன் என்று உயர்வாகக் கூறுதலும் கொல்லாமையையும் ஊன் உண்ணாமையையும் ஆங்காங்கே சிறப்பித்தலும் பின்னால் வந்தவர்கள் திசை திருப்பிவிட மேற்கொண்ட முயற்சியின் விளைவாகும். அது கூறும் வாழ்க்கை நோக்கு வள்ளுவரின் வாழ்க்கை நோக்கிற்கு நேர் மாறானது. வள்ளுவர் உழுதொழிலைச் சிறப்பித்து ஓரதிகாரம் ஒதுக்கி, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்று முழங்குவார். மனுநீதி உழுதொழில் கேவலமானதென்றும் அதனைப் பிராமணர் செய்யக் கூடாதென்றும் அறிவுறுத்தும் (45). இவ்வொன்றே இரண்டு நூல்களுக்குமுள்ள வேறுபாட்டைக் காட்டப் போதுமானதாகும்.

வேள்வி செய்வோன் பல மனைவியரோடு சேர்ந்து செய்ய வேண்டுமென்று விதித்த வடநூலார் ‘சஹதர்மிணி’ என்று பெண்ணை அழைப்பர். இவ்வுலக வாழ்க்கையில் அன்றாட அலுவல்களில் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு ஆணுக்கு இணையாய்ச் செயல்பட வேண்டியவள் என்ற கருத்தில் வள்ளுவர் பெண்ணை வாழ்க்கைத் துணை என்று அழைத்து ஒரு தனி அதிகாரத்தில் அவள் நலம் பேசுவார். ஒருவனுக்கு ஒருத்தி எனும் ஒழுங்கை வற்புறுத்தும் முறையில்,

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மை உண்டாகப் பெறின் (54)

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் (57)

என்றெல்லாம் பெண்ணின் பெருமை பேசுவார். ‘பிறனில் விழையாமை’ எனும் அதிகாரத்தில் பிறன்மனை நோக்காப் பேராண்மையென்றும்,

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரில் பேதையார் இல் (142)

அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்

பெண்மை நயவாமை நன்று (150)

என்றும் விதந்து கூறுவார். பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலே ஒருவன் தன்னை ஆண் குழந்தை பெற்று நரகத்திலிருந்து காத்துக் கொள்ளவே என்று மனுநூல் கூற, வள்ளுவர் மக்களைப் பெறுதல் இல்லறத்துக்குச் சிறப்பு என்பதை,

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன் மக்கட்பேறு (60)

என்று மக்களால் இவ்வாழ்வில் பெறும் இன்பத்தை

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ் (64)

மக்கள் மெய்திண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற் கேட்டல் இன்பம் செவிக்கு (65)

குழலினிது யாழினிது என்ப தம்மக்கள்

மழலைச் சொல் கேளாதவர் (66)

என்றெல்லாம் மெய்மறந்து பாடுவார். மனிதவினத்தில் பாதியான பெண்ணோடு இணைந்து மக்களைப் பெற்றுவாழும் இல்லறச் சிறப்பை இவ்வாறு போற்றும் அறநூலையோ, சமய நூலையோ வேறெங்கும் காண்பது அரிது. பகவத்கீதையைக் கட்டுடைப்புச் செய்யும் அயோத்திதாசர் அதிலும் உபநிஷதங்களிலும் கூறப்படுகின்ற தத்துவக் கருத்துக்களெல்லாம் எப்படி இடம் பெயர்ந்தனவென்றும் பொருள் மாற்றம் பெற்றன வென்றும் விளக்குவது ஆராயத்தக்கது.

அதாவது, பன்னீராயிரம் கோபிகா ஸ்திரீகளின் லீலா விநோதனும் அர்ச்சுனனுக்கு சுபத்திரை, பவழவல்லி, அல்லியரசாணி முதலிய ஸ்திரீகளைக் கூட்டி வைத்தவருமாகிய பாரத கதா புருஷன் கிருஷ்ணனுக்குப் புத்தருக்குரிய பகவனென்னும் பெயரைக் கொடுத்து அப்பகவானால் போதித்த பகவத் கீதையென வகுத்து பூர்வ சத்யதன்மத்தில் சிலதைக் கூட்டியும் குறைத்தும் தன்னைப் போஷிக்க வேண்டும், தன்னை ஆராய வேண்டும், தன்னைச் சிந்திக்க வேண்டும் என்னும் தன்மங்களை என்னைப் போஷிக்க வேண்டும், என்னை ஆராய வேண்டும், என்னைச் சிந்திக்க வேண்டுமெனக் கிருஷ்ணன் கூறியது போல் ஆரம்பித்துச் சிலைகளைத் தொழுது முத்தி பேறு பெற விருப்பற்றவர்கள் கிருஷ்ணனாகிய என்னைத் தொழுவீர்களாயின் சகலமும் நானாதலால் நானே முன்னின்று சுகமளிப்பேன் என்பதுடன் கொல்ல வைப்பவனும் நானே, கொல்லுபவனும் நானே, கொல்லப்படுபவனும் நானே என வரைந்து வைத்துக் கொண்டு, இஃது பாரத யுத்த ஆரம்பத்தில் அர்ச்சுனன் வில்லை வளைத்துக் குணத்தொனி செய்து படையை நோக்கியபோது சகல சேனைத் தலைவர்களும் தனது பந்து மித்திரராகத் தோன்றியபடியால் வளைத்த வில்லை நிமிர்த்திச் சோர்வடைந்தானாம். அதைக் கண்ட கிருஷ்ணன் இக்கீதையை அர்ச்சுனனுக்குப் போதித்து யுத்தவுச்சாகம் உண்டாக்கியதாகப் பாயிரம் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இக்கீதையை முற்றும் வாசிப்பவர்கள் சற்று நிதானித்து வில்வளைத்துக் குணத்தொனி செய்த பின் இக்கீதையைச் சொல்லி முடிக்கும் வரையில் எதிரியின் சேனைத் தலைவர்கள் பொறுத்திருப்பார்களா என்பதை ஆலோசிப்பார்களாயின் இஃது யுத்தகாலப் போதனா கீதையன்று, காலத்திற்குக் காலம் சாவகாசத்தில் வரைந்து கொண்ட கீதையென்றே தெள்ளற விளங்கும். பெளத்தரிடமுள்ள கர்ண ராஜன் கதையில் கிருஷ்ணன் பெயரும் கிடையாது. இக்கீதையும் கிடையாது.

ஈதன்றி, பெளத்த தன்ம சாஸ்திரிகள் உடலுயிர் பொருந்தும் செயலுக்குரிய புருஷனுக்கு ஆன்மனென்னும் பெயர் கொடுத்து அப்பெயரை ஓர் புருஷன் பற்றற்ற நிலையாம் அநித்திய, அனாத்துமன், நிருவாணம் அடையும் வரையில் வழங்கி வந்திருக்கிறார்கள். பஞ்ச ஸ்கந்தங்கள் அமைந்த புருஷனே ஆன்மன், ஆன்மனே புருஷனென்று உணராதும் அதன் அந்தரார்த்தம் அறியாதும் தேகத்துள் பரமாத்துமெனன்றும் சீவாத்து

மனென்றும் இரண்டு இருக்கிறதாகவும் அவைகளே தேகத்தை ஆட்டி வைக்கிறதென்றும் தாங்கள் மயங்கிக் கெடுவதுடன் அவற்றை வாசிப்பவர்களும் கெட்டு மயக்குறும்படி எழுதி வைத்துள்ளதுமன்றி . . . (அலாய்சியஸ் I 666-67).

பகவத் கீதை இந்துக்களால் வேத உபநிடதங்களோடு வைத்து எண்ணப்படும் சமய நூலாகும்; இறைவனின் கூற்றென்று அவர்களில் பலரால் நம்பப்படுவதாகும். உயர்ந்த பெருமைக்குரிய நூலென்று உலகத்து அறிஞர்கள் சிலர் அதனைப் பாராட்டியுள்ளனர். இது எப்பொழுது தோன்றியது என்பது பற்றி இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. வியாசர் எழுதிய மகாபாரதத்தில் பின்வந்தவர்களால் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்ட இச்சிறு நூல் பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டது. இதற்கு அறிஞர்கள் காலந்தோறும் வெவ்வேறு விளக்கங்கள் அளித்து வந்துள்ளனர். இறைவனின் ஈடிணையற்ற உயர்வு பற்றியும் ஆன்மிகம் பற்றியும் கர்ம, ஞான, பக்தி யோகங்கள் பற்றியும் பேசுகின்ற பகவத் கீதை வாழ்க்கை மறுப்பு நூலன்று, நல்வாழ்வு வாழ வழி சொல்லும் நூலே அதுவென்று வாதிடுவார் பலர்.

பகவத் கீதையின் மையக் கருத்தென்று கூறப்படுவது எல்லாப் பொருள்களிலும் இறைவனையும் இறைவனில் எல்லாப் பொருள்களையும் காண்பதேயாகும். பார்த்தனின் வேண்டுகோளின்படி பேருருவம் காட்டும் கண்ணன்,

பல நூறாகவும் பல்லாயிரமாகவும், வகை பல, நிறம் பல, அளவு பலவாகவும் உள்ள என் உருவங்களைப் பார் (115).

என்று சொல்கிறான். பார்த்தன்,

தேவனே, உன் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கின்றேன். பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனையும் எல்லா முனிவர்களையும் தேவ சர்ப்பங்களையும் காண்கிறேன். பல தோள்களும், வயிறுகளும், வாய்களும், விழிகளும் உள்ள எல்லையற்ற வடிவில் நின்னை எங்கும் காண்கிறேன். எல்லாவற்றுக்கும் இறைவனே, எல்லாம் தன் வடிவாகக் கொண்டவனே, உனக்கு முடிவும் இடையும் தொடக்கமும் காண்கிலேன். மகுடமும், தண்டும், வலயமும் அணிந்துள்ளாய். ஒளித்திரளாகி எங்கும் ஒளிர்கின்றாய் . . . அழிவில்லாதவனாய், அறிதற்குரியனவற்றில் மிகவும் சிறந்தவனாய், வையத்தின் உறையுளாய், கேடில்லாதவனாய், அறத்தினைக் காப்பாய் . . . ஆதியும், நடுவும், இறுதியும் இல்லாதவனாய், வரம்பிலா ஆற்றலுடையவனாய், கணக்கற்ற தோளினை

உடையவனாய், ஞாயிற்றையும் திங்களையும் கண்களாகக் கொண்டவனாய், கனல் போலும் முகத்தினனாய், ஒளியால் முழு உலகையும் கொளுத்துவோனாய் உன்னைக் காண்கின்றேன் (11. 15-19).

என்று வியந்துரைக்கின்றான்.

கண்ணன் பார்த்தனிடம் “யான் அருள் கொண்டு ஆத்மயோகத்தால் எனது உருவை உனக்குக் காண்பித்தேன். ஒளிமயமாய், அனைத்துமாய், எல்லையற்றதாய் உள்ள இவ்வடிவத்தை இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாரும் பார்த்ததே கிடையாது. வேதம், வேள்வி, கல்வி, ஈகை, செயல் ஆகிய எதனாலும் மனித உலகத்தில் என்னை இவ்வடிவில் உன்னையன்றி வேறு யாராலும் பார்க்க முடியாது” (11. 47–48).

என்று கூறவும் காண்கிறோம்.

இங்கு மட்டுமல்லாமல் இன்னும் பலவிடங்களிலும் இறைவனின் பெருமை இறைவன் கூற்றாகவே வருகிறது.

யான் பிறப்பற்றவன், அழிவற்றவன், உயிர்களுக்கெல்லாம் இறைவன். எனினும் யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன் . . . எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து போய் அதர்மம் தலைதூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் நான் பிறப்பெடுக்கிறேன். நல்லோரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும் அறத்தை நிலை நாட்டவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன் (4. 6-8).

நான் உலகம் முழுமைக்கும் ஆக்கமும் அழிவும் ஆவேன். என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் எதுவுமில்லை. நூலில் மணிகளைப் போல் இவ்வுலகமெல்லாம் என் மீது இணைக்கப்பட்டது.

நான் நீரில் சுவை ஞாயிற்றிலும் திங்களிலும் ஒளி, எல்லா வேதங்களிலும் நான் பிரணவம், வானில் ஒலி நான்; ஆண் மக்களிடம் நான் ஆண்மை.

மண்ணில் தூய மணமும் தீயில் சுடரும் நான். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பு நான். தவம் செய்வோரின் தவம் நான். எல்லா உயிர்களுக்கும் நான் சாதனமாகிய விதை, புத்தியுடையோரின் புத்தி நான்; ஒளியுடையோரின் ஒளி நான் (7. 6-10).

இவ்வாறு யாவரும் அறிந்த இறைவனின் தன்மைகள் மீண்டும் மீண்டும் இறைவனாலேயே எடுத்துச் சொல்லப்பெறும். இவையெல்லாம் பார்த்தனின் கூற்றாகவோ, கவியின் கூற்றாகவோ இருந்திருந்தால் ஓரிடத்தில் மட்டும் வலியுறுத்தப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். மனித வாழ்வுக்கு வேண்டிய அறிவுரைகள் நூல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன.“செயலின் பயனில் பற்றுதல் இன்றி, தான் செய்ய வேண்டிய தொழிலை எவன் செய்கிறானோ, அவன் துறவி; அவன் யோகி” என்றும் “ஓயாமல் தொழில் செய்; நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்’ என்றும் “எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும் ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கின்றானோ அவனே உண்மையுணர்ந்தவன்” என்றும் “எல்லாச் செயல்களையும் கடவுளுக்கென்று எண்ணி, பற்றற்று எவன் தொழில் செய்கிறானோ அவனைப் பாவம் தீண்டுவதில்லை” என்றும் “மனிதனுக்குச் சொந்தமானதென்று ஒரு செய்கையும் கிடையாது; செய்யும் திறமையையும் அவனுக்குக் கடவுள் தரவில்லை; கர்மப் பயனை அவன் அடைவதுமில்லை; எல்லாம் இயற்கையின்படி நடக்கிறது” (5.14) என்றும் “துன்பங்களில் மனம் கெடாதவனாய், இன்பங்களில் விருப்பற்றவனாய், அச்சமும் சினமும் தவிர்க்கும் முனிவன் மனவுறுதி வாய்ந்தவன்; எவன் நல்லதிலும் கெட்டதிலும் வீழ்ச்சியற்றவனாய், ஆசையும் பகையுணர்வுமின்றி இருப்பானோ, அவனது அறிவே நிலையானது” (2. 55-57) என்றும் “நீ பாவிகளில் மிகக் கொடியவனாயினும் ஞானத்தின் உதவியால் தீமையாகிய கடலைக் கடக்க முடியும்” (4:36) என்றும் “அறிவும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுமையும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும் துன்புறுத்தாமையும், நடுநிலையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழ்ச்சியும், புகழும் ஆகிய பல இயல்புகளும் உயிர்கள் என்னிடமிருந்து பெறுவன” (10.4-5) என்றும் “பழக்கத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது; ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது; தியானத்தைக் காட்டிலும் செய்கையின் பயன்களைத் துறத்தல் மேலானது. அதனைக் காட்டிலும் மன அமைதி உயர்ந்தது” (2. 12) என்றும், “எவனை உலகினர் வெறுப்பதில்லையோ, எவன் உலகத்தாரை வெறுப்பதில்லையோ, களி, அச்சம், சினம் ஆகியவற்றிலிருந்து எவன் விடுபட்டவனோ, அவன் எனக்கினியவன் (2. 15) என்றும், அகம்பாவமின்மை, ஆடம்பரமின்மை, துன்பம் செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசிரியனை வழிபடுதல், தூய்மை, மனவுறுதி, தன்னைக் கட்டுப்படுத்தல், புலனின்ப நாட்டமின்மை, பிறப்பு, இறப்பு, நரை, நோய், துயரம் ஆகியவற்றை ஒரே முறையில் நோக்குதல், பற்றின்மை, மகனையும், மனைவியையும் வீட்டையும் தன்னுடைமையெனக் கருதாமை, விரும்பியனவும் விரும்பாதனவும் அடையுமிடத்து ஒரு நிலையிலிருத்தல், என்னிடம் இடையறாது செலுத்தப்படும் பக்தி, தனியிடங்களை நாடுதல், மக்கள் கூட்டத்தில் விருப்பமின்மை, ஆத்ம ஞானத்திலிருந்து பிறழாமை, உண்மை உணர்தல் ஆகியவையே ஞானமெனப்படும் (13, 8-11) என்பன போன்ற கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது உயர்ந்த அறத்தை முருகியல் உணர்வோடு சில இடங்களில் சொல்லும் கீதையில் கூறியது கூறல், முன்னுக்குப் பின் முரண்படக் கூறல், கூறத்தேவையற்றதை மீண்டும் மீண்டும் கூறல், பொருளைத் தெளிவாக்காது சொற்களை அடுக்குதல் போன்ற குறைகளெல்லாம் தவிர்க்கப்படாதது வருந்தற்குரியதாகும். உலக மாந்தரின் உய்வுக்கு எந்நாளும் பொருந்தக்கூடிய வழிகூற வேண்டிய கீதை சில குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட குழுக்களின் பழக்க வழக்கங்களை ஏற்றிப் பேசுவதும் மக்களுள் வேறுபாடுகளைக் கற்பித்துச் சிலரைப் போற்றுவதும் கீதையை உலகப் பொதுமறையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதற்குக் காரணங்களாகும். பண்டை இந்தியாவில் தேவதைகளை மகிழ்விக்க ஆரியர்கள் செய்த வேள்விகளை விதந்து கூறும் பகுதிகள் இன்று இந்த நாட்டிலேயே பொருளற்றுப் போய்விட்டன. நால்வருணம் பற்றியும் அவற்றுள் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தியும் மக்களுள் ஒரு பகுதியினரைச் சூத்திரர் என்று இழிவுபடுத்தியும் பெண்ணினத்தை முற்றும் குறையுடையதாக மதிப்பிட்டும் பேசும் கவிதைகளெல்லாம் இறைவனின் கூற்றென்று சொல்லப்படும் நூலில் இடம்பெற்றிருக்கக் கூடாது.

பார்த்தன் ஏன் போரிட மாட்டேன் என்று கண்ணனிடம் கூறுவது நோக்கற் பாலது:

ஒரு குலம் அழிவதால் குல தர்மங்களும் சடங்குகளும் அழிகின்றன; குலதர்மம் அழிவதனால் குலம் முழுவதையும் அதர்மம் தாக்குகிறது.

அதர்மம் சூழ்வதால், ஒழுங்கு குலைகிறது; பெண்கள் பாவம் செய்கிறார்கள்; அவர்களின் தூய்மை கெடுகிறது. பெண்கள் கெட்டால், சாதிகளின் ஒழுங்கு கெட்டு, சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுகிறது.

அக்குழப்பம், அக்குலத்தாரையும், அதனை நாசம் செய்தவரையும் நரகத்திற்குக் கொண்டு செல்கிறது. இறந்தவர்களின் ஆவிகள், சடங்குகளில் அளிக்கப்படும் பிண்டமும் நீரும் கிடைக்காமல் துன்புறுகின்றன.

குலக்கேடர் செய்யும் குற்றங்களால் சாதிக் குழப்பம் ஏற்பட்டு, சாதி தருமங்களும் தொன்று தொட்டு வரும் குலதருமங்களும் கெடுகின்றன.

சாதி தருமங்களைக் கடைப்பிடிக்காத மனிதர்களுக்காக நரகம் காத்திருக்கிறதென்பதை நாம் கேள்விப்பட்டதில்லையா? (1. 40-44)

வேள்வியின் இன்றியமையாமையைக் கண்ணன் பார்த்தனுக்கு எடுத்துச் சொல்லும்போது காலத்தாலும் இடத்தாலும் மனித குலம் முற்றுக்கும் பொருந்தும் அறம் பேசப்படவில்லை.

வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர ஏனைய தொழில்களெல்லாம் மனிதருக்குத் தளையாகிறது. எனவே பற்றை நீக்கித் தொழில் செய்வாய்.

முன்பு பிரம்மதேவன் மனிதரையும் வேள்வியையும் ஒரே சமயத்தில் படைத்துச் சொன்னான்: “வேள்வியில் பல்கிப் பெருகுவீர்கள்; வேள்வியால் நீங்கள் விரும்பியவற்றையெல்லாம் அடைவீர்கள்.

வேள்வியால் தேவர்களைப் போற்றுங்கள்; அப்பொழுதுதான் அவர்கள் உங்களை விரும்புவார்கள்; அவர்களோடு இணைந்திருந்தால் உயர்ந்த தவத்தை அடைவீர்கள்.

நீங்கள் செய்யும் வேள்வியால் மகிழ்வடைந்து தேவர்கள் நீங்கள் கேட்பவற்றையெல்லாம் கொடுப்பார்கள்; தேவர்களுக்குக் கைம்மாறு செய்யாமல் அவர்கள் கொடுப்பதைத் துய்ப்போர் கள்வராவார்.

வேள்வியில் எஞ்சியதை உண்ணும் நல்லவர்கள் பாவங்களிலிருந்து விடுபடுகின்றார்கள். தமக்காக மட்டும் உணவு சமைக்கும் தீயவர்கள் உண்ணும் உணவு பாவமே.

உணவால் உயிர்கள் வாழுகின்றன. மழையால் உணவு கிடைக்கின்றது. வேள்வியே மழையை விண்ணிலிருந்து கொண்டு வருகின்றது. வேள்வி புனிதமான செயலாகும்” (3. 9-14).

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்று பேச வேண்டிய நூல் பல தேவர்களை வேள்வியால் களிப்படையச் செய்து நலன் பெற வேண்டும் என்று அறிவுரை கூறுவது விந்தையானது.

“உலக மக்களெல்லாம் என்னுடைய குழந்தைகள், நான் அவர்கள் யாவரிடமும் ஒரே விதமான அன்பைச் செலுத்துகிறேன்” என்று சொல்ல வேண்டிய இறைவன், “நான்கு வருணங்களும் என்னிடமிருந்தே தோற்றம் பெற்றன. அவரவர் தன்மைக்கும் தொழிலுக்கும் நீதி செய்யும் வகையில் இவ்வருணங்களைச் சமைத்தேன். அழிவற்றவனும் செய்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவனுமாகிய நான் இதனைச் செய்தேன் என்று அறிந்து கொள்” (4:13) என்று சொல்கிறார்.

நால் வருணங்களுள் பிராமணரைத் தவிர ஏனையோரைக் கீழானவராக இறைவன் கருதுவதாகத் தெரிவிக்கும் பாடல்களும் கீதையில் உண்டு.

என்னிடம் அடைக்கலம் கேட்டு வருபவர் யாவராயினும் அவர்கள் எவ்வளவு கீழோராயினும் நலிந்தோராயினும் பாவம் செய்தவராயினும் அவர்கள் பெண்களாகவோ, வைசியர்களாகவோ, சூத்திரர்களாகவோ இருந்தாலும் கூட, உயர்ந்த நிலை அடைவார்கள். அப்படியானால் என்னை விரும்பும் தூய்மையான பிராமணர்களைப் பற்றியும் அரசகுலத்து முனிவர்களைப் பற்றியும் சொல்ல வேண்டுமா? (9. 32-33)

எல்லாப் பெண்களும் கீழ்வருணங்களோடு சேர்க்கப்பட்டிருப்பது கருதற்குரியது.

பகவத் கீதையின் இறுதி அத்தியாயத்தில் நால்வருணங்களும் பிறவிக் குணத்தை அடிப்படையாகக் கொண்டவையென்றும் அவை ஒவ்வொன்றும் தத்தம் தொழிலைச் செய்தலே முறையென்றும் அறிவுறுத்தப்படுகிறது.

பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோருடைய தொழில்கள் அவர்களுடைய பிறவிக் குணங்களுக்கேற்ப வேறுபடும். மனத்தைக் கட்டுக்குள் வைத்தல், தவம், தூய்மை, பெருந்தன்மை, நேர்மை, ஞானம், இறை நம்பிக்கை ஆகியவை பிராமணனுக்குரியவை. வீரம், ஒளி, உறுதி, திறமை, போர்க்களத்தில் அஞ்சாமை, ஈகை, நல்ல தலைமை ஆகியவை சத்திரியனுக்குரியவை. வணிகம், உழவு, பசுக்களை வளர்த்தல் ஆகியவை வைசியர்களுக்குரியவை. பணி செய்வது சூத்திரனுக்குரியது ... பிறர்க்குரிய தருமத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தருமத்தைக் குறைபடச் செய்தாலும் ஒருவன் பாவம் செய்தவன் ஆகான் (18. 41-47).

பகவத் கீதையின் ஆணைகள் ஒரு சார்புடையவை என்பது வெளிப்படை எல்லாவுயிர்களும் ஒத்த உயர்வுடையவை என்ற உண்மை புறக்கணிக்கப்பட்டு மக்களைப் பிறப்பின் அடிப்படையில் நான்கு பகுதிகளாகப் பிரித்து அவரவர்க்குரிய தொழில்களை முறையின்றி விதித்துப் பெண்ணினம் முழுவதையும் தரக்குறைவாகத் தாழ்த்தி வைக்கும் சமுதாய அமைப்பு எந்த விதத்திலும் எக்காலத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று; அதனை அறமென்று சொல்லுவதைச் சான்றோர் ஏற்க மாட்டார்; அத்தகைய அமைப்புடைய சமுதாயத்தைக் கண்டு நல்லறிவு உடையார் இரக்கமும் அறச்சினமும் கொள்வர் என்பது திண்ணம். பகவத் கீதை பேசும் தருமம் மனித ஒருமைப்பாட்டுணர்வுக்கு முற்றும் மாறானது; வள்ளுவர் சுட்டும் அறவாழ்விற்குப் பொருந்தாது. “பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்றும் “அந்தணர் என்போர் அறவோர்” என்றும் தெளிவாக்கும் வள்ளுவர் ஆரிய, திராவிட இனங்கள் பற்றியோ, தமிழர், தமிழரல்லாதார் வேறுபாடு பற்றியோ பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் போன்ற பிரிவுகள் பற்றியோ சாதிகள் பற்றியோ குறிப்பிடாதது அவர் அவ்விதப் பாகுபாடுகளையெல்லாம் முற்றும் புறக்கணித்தார் என்பதையும் மனங்கொளல் வேண்டும். வேள்வி செய்வாரை உயர்த்தாது இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான உணவைப் படைக்கும் உழவரை உயர்த்தி “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், அதனால் உழந்தும் உழவேதலை” என்று வள்ளுவர் கூறுவது அவர் மறுமையைப் பெரிதுபடுத்தாது. இம்மண்ணில் மாந்தர் நல்ல வண்ணம் வாழ வேண்டியதையே கருத்தில் கொண்டார் என்பதைப் புலப்படுத்தும்.

வேதங்கள், உபநிடதங்கள், மனுநூல், கீதை ஆகியவையெல்லாம் மாந்தருக்குப் பயன்தரும் நூல்களாகாவென்று ஒதுக்கித் தள்ளும் அயோத்திதாசர் ஏன் திருக்குறளை எக்காலும் எல்லாவற்றினும் உயர்த்திப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள அந்நூல்களை மேலெழுந்தவாரியாக ஒருமுறை பார்த்தலே போதுமானது.