பக்கம்:Humorous Essays.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

3

என்று. பூர்வகாலத்தில் நமது தேசத்திய ரிஷிகள் சில மரப் பட்டைகளினின்றும் நார்களை எடுத்து மரவுரிகள் செய்து உடுத்திக் கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆயினும் சவுக்குக் கட்டைகளிலிருந்து எப்பொழுதாவது மரவுரிகள் செய்ததாகத் தெரியவில்லை. ஆகவே சவுக்குக் கட்டைகள் விற்கும் ஜவுளி மார்க்கெட் என்பது உலகத்திலில்லாத விஷயமல்லவா? இந்த மார்க்கெட்டை முன்னின்று கட்டினவர் ஒரு வடக்கத்திய ஆசாமி என்று கேள்விப்படுகிறேன். அவர் இப்பொழுது சென்னையிலில்லை. வேறு எந்த ஊரிலிருக்கிறாரோ தெரியாது. எந்த ஊரில் இருந்த போதிலும் அந்த ஊரில் இம்மாதிரியான “ஜவுளி” மார்க்கெட் கட்டாமலிருக்கும்படியாக நான் அவரை வேண்டிக் கொள்கிறேன்.

சென்னையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் ஒரு கட்டிடமிருக்கிறது; இதற்கு “கார்ப்பொரேஷன் பழக்கடை” என்று பெயர். இது சில வருஷங்களுக்கு முன்பாக, “பழங்களையெல்லாம் வீதிகளில் விற்பது தகுதியல்ல; ஆகவே பம்பாய், கல்கத்தா முதலிய பட்டணங்களிலிருப்பது போல் ஒரு தனிக் கட்டிடமிருக்க வேண்டும்” என்று நமது சென்னைக் கார்ப்பொரேஷன் கவுன்ஸிலர்கள் கட்டின இடமாகும். இதன் வாயில் வழியாக நீங்கள் நுழைந்தால் முதல் முதல் உங்கள் கண்களுக்குப் புலப்படும் பழ தினுசுகள் அடியிற் குறித்தனவாம்:- துணிகள், சென்டுகள், பாய்கள், பொம்மைகள், பந்தாடும் கருவிகள், கட்டில்கள், புஸ்தகங்கள், கொசுவலைகள், கம்பளிகள் முதலியவை. இவை எந்த மரங்களில் காய்த்துப் பழுக்கின்றனவோ, என்னால் கூற முடியாது. கார்ப்பொரேஷன் கவுன்ஸிலர்களில் யாராவது தாவர சாஸ்திரப் பரீட்சையில் தேறினவர்களாயிருந்தால் அவர்கள் ஒரு வேளை இதற்குத் தகுந்த பதில் அளிக்கலாம். இப்படிப்பட்ட பழக்கடைகள் இந்தியா முழுதும் வேறு எந்த இடத்திலும் கிடைப்பது அரிதென்றே நாம் கூற வேண்டும்.

சென்னை வாசிகள் திருவல்லிக்கேணி பீச்சிலிருந்து வடக்கே கடற்கரையோரமாய்ப் போனால், அங்கே இரும்பு வாராவதிக்கருகில் சிமிட்டியினால் கட்டப்பட்ட பலமான கட்டிடம் ஒன்றைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/7&oldid=1352401" இலிருந்து மீள்விக்கப்பட்டது