பக்கம்:அகமும் புறமும்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

325 • அகமும் புறமும்

போதெல்லாம் என்னுள்ளம் வருந்திய வருத்தம் நீயே அறிவாய்!” என்று பிற்காலத்தில் ஒரு கருணை உள்ளம் (இராமலிங்க வள்ளலார்) பேசிற்று. பாரி இக்காட்சியில் தன்னை மறந்து, தன்னிலைமையை மறந்து, அறிவிழந்து, கூர்த்த, அறிவெல்லாம் கொள்ளை கொடுத்து, வருந்தும் கொடியுடன் உணர்வின் உதவியால் ஒன்றாகிவிட்டான். பாரியின் இந்த நிலையைக் கற்பனை செய்துகொண்டு தான் ஆசிரியர்,

அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை?
                                                                 (குறள்–315)

என்று பாடினார் போலும்! அந்த ஓரறிவுயிர் தன்னுடைய துயரை நம் போன்றவர் காதாற் கேட்கும்படி வாய்விட்டுக் கூறவில்லை. முல்லைப் பூக்கள் பற்கள் போல இருப்பினும், வாய்விட்டு ஒன்று வேண்டும் என்று கேட்பது உயிர் போகும் நேரத்திற்கூட இழிந்த செயலாகலின், கேட்க வில்லை போலும்! அது தமிழ்நாட்டு முல்லைக் கொடியன்றோ? ஆனால், எதிரில் நிற்பவனும் ஒரு தமிழ் மகன் அல்லனோ? எனவே, வாய் திறந்து கேட்பதன் முன்னரே தருவதுதான் முறை என்று கருதித் தந்து விட்டான். எதனைத் தந்தான்? தன் பெருமைக்கேற்பத் தன் தேரையே தந்துவிட்டான். வேறு ஆராய நேரம் ஏது? அறிவின் துணைகொண்டு ஆராய்ந்திருப்பின், பாரியாக முடியாதன்றோ? உணர்ச்சி உலகத்தில் வாழும் அந்தக் கருணை வள்ளலுக்குத் தனக்கும், கொடிக்கும், தேருக்கும் உள்ள வேறுபாடு எங்கே தெரியப் போகிறது! தான் நடந்து செல்ல முடியும். ஆனால், அம் முல்லைக் கொடி பற்றிப்படரக் கொம்பு வேண்டும். கொம்பின் வேலையைத் தேரும் செய்யும். எனவே, தேரை நிறுத்தி விட்டான்.