பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

அண்ணா—சில நினைவுகள்


வெங்கட்ராமன் அய். ஏ. எஸ். அவற்றை ஒரு நூலாக அச்சியற்றினார். பேருந்துக்கு ஒவ்வொன்றாகத் திருக்குறளை எழுதச் செய்தார்.

அண்ணா முதல்வரானதும், திரு. வேணுகோபால் சர்மாவை அவரிடம் அறிமுகப்படுத்தினோம். அவர் தீட்டிய திருவள்ளுவர் ஒவியத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்கிடச் செய்தோம். பேருந்துகளில் அந்தப் படமும் வைக்கப்பட்டது. இதில் கூட என் பங்கு இருந்திருக்கிறது. எப்படியென்றால், புகழ் செறிந்த இந்தத் திருவள்ளுவர் உருவத்தை, மாயவரத்தில் சில மாதங்கள் தங்கியிருந்த போதுதான் வரைந்தார் வேணுகோபால் சர்மா. எனக்கும் நண்பராகையால், அடிக்கடி அழைத்துக் காண்பித்துக் கருத்து அறிவார் அங்கேயே. பிற்காலத்தில் என்னிடம் மிக்க அன்போடும் நன்றியோடும் பழகினார் சர்மா.

அண்ணாவுக்குத் திருக்குறளில் இருந்த ஈடுபாட்டை நன்குணர்ந்த கலைஞர், கடற்கரைச் சாலையில் திருவள்ளுவர் சிலை அமைத்தார். உலகிலேயே ஈடும் எடுப்புமில்லாத நினைவுச் சின்னமாகச் சாதனை படைத்த குறுகிய கால அளவில், வள்ளுவர் கோட்டத்தைச் சமைத்தார். ஆசியாவிலேயே பெரியதொரு அரங்கம் இங்குதானே உள்ளது! தேருக்குள் திருவள்ளுவர் உருவம்! இந்தப் பணி நிறைவெய்தியபோது, இதன் உள்ளே செல்லும் உரிமையைக் கலைஞருக்கு அளிக்கவில்லை மத்திய அரசு. அதனால், இந்த வள்ளுவர் கோட்டம் நிறுவிடப் பெரும்பணியாற்றிய நானும், இதற்குள் இதுவரை நுழைந்திடவில்லை! எனினும், அண்ணன் வாழ்ந்த நுங்கம்பாக்கத்திலேயே வள்ளுவரும் வாழ்கிறாரே-என்ன பொருத்தம்!