பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44


தாயும் தாரமும் ஒருவனை விரும்ப மாட்டார்கள் என்பது எப்பொழுது தெரியுமா? பொருள் இல்லாத போது, வலிமையில்லாத போது,

வலிமை இல்லாதவனை தாய் மட்டுமல்ல. தாரம் மட்டு மல்ல, சமுதாயமே விரும்பாது, வலிமையில்லாதவன் வீட்டுக்கு பாரம் மட்டுமல்ல; சமுதாயத்துக்கு அவன் சுமை.

வலிமை இல்லாதவன் ஜடத்துக்கு சமம். அவன் நோய் வாழும் பாழும் கூடாகத் தான் இருப்பான். நோயாளியால் யாருக்குமே பயன் இல்லை. நோயாளியாக வாழ்வது நாட்டுக்கு செய்யும் துரோகமாகும்.

ஒரு நாய்க்கு முழுத்தேங்காய் கிடைத்தால் என்ன செய்யும்? உருட்டிக் கொண்டு கிடக்குமே தவிர, உடைத்துத் தின்ன, அனுபவிக்க அதற்குத் தெரியாது. அது போலவே, நோயாளிக்கு இருக்கின்ற பொருளும் புகழும் அப்படித்தான் அவனை வாழவைக்கும்.

நோயாளிக்கு வலி காரணமாக முனகத்தான் தெரியும். மற்றவர்களைக் கண்டு எரிச்சல் படத்தான் முடியும். அவன் பொருளை அடுத்தவர்கள் தான் அனுபவிப்பார்கள். அவன் இறப்பைத் தான் விரும்புவார்கள். 'சீக்கிரம் சாகமாட்டானா அவனது பொருள் நமக்கு வந்து சேராதா' என்று தான் காத்துக் கிடப்பார்களே தவிர, நோயாளிக்குக் கருணை காட்ட மாட்டார்கள்.

காலம் மாறிக் கொண்டு வருகிறது. பொருளின் இயல்பும் அப்படித்தான்.

பொருளைப் பயன்படுத்த, புகழில் மகிழ, உணவை சுவைக்க, உலகை ரசிக்க, உண்மையான வாழ்க்கையை வாழ்ந்து செல்ல உடல்தான் முக்கியம் அதிலும் வலிமையான உடல்தான் அவசியம்.