பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

களில் ஆற்றைக் கடக்கப் போகின்றன என்பதை எதிரிகள் கண்டுகொள்ள முடியாமல் திகைப்படையவே இந்தத் தந்திரம் கையாளப்பட்டது. இதற்கு ஏற்றபடி போரஸும் தம் யானைகளை அங்குமிங்கும் அலைத்துக்கொண்டிருந்தார். ஆனால் பின்னால் ஆங்காங்கே ஒற்றர்களை நிறுத்திவிட்டு யானைகளை அவர் வழக்கம்போல் மற்றைப் படைகளுடன் நிறுத்திக்கொண்டார்.

ஒரு நாள் இரவில் அலெக்சாந்தர், தேர்ந்தெடுத்த குதிரைப் படைகளுடன், மேல் கரையிலேயே இருபத்தொன்பது கிலோ மீட்டர்கள் கடந்து சென்று அங்கிருந்து ஆற்றைக் கடந்து, சேற்றிலும் மண்ணிலும் உழன்று, மறுநாள் காலையில் அங்கு வந்து நின்ற போரஸின் படையைச் சந்தித்தான். அவனுடைய காலாட் படையும் விரைவிலே அங்கு வங்து சேர்ந்தது. செலியூகஸ், பெர்டிகஸ் என்ற தளபதிகளின் தலைமையில் 6,000 வீரர்கள், தங்கள் வழக்கம்போல் நீண்ட சதுர அணி வகுத்து, முன்னேறிச் சென்றனர். போரில் அலெக்சாந்தரின் அருமைக் குதிரையான பூஸிபாலஸ், தளர்ச்சியடைந்து கீழே சாய்ந்து, மாண்டு போயிற்று. அதற்கு வயதாகி விட்டது. மேலும் அஃது அன்று சேற்றைக் கடந்து வந்ததில் மிகவும் களைப்படைந்திருந்தது. பதினேழு ஆண்டுகளாகத் தனக்கு அரும்பெரும் தொண்டு புரிந்து வந்த கருப்புக்குதிரை ஆயுதங்கள் எதனாலும் தாக்கப்படாமலே இறந்து விழுந்துவிட்டதைக் கண்டு அலெக்சாந்தர் வருந்திய போதிலும், போரின் நடுவே, வேறு ஒரு குதிரையின் மேல் ஏறி, வழக்கம்போல் வாளை உரு-