பக்கம்:அலைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174 O லா. ச. ராமாமிருதம்



பத்திகிட்ட திரியாட்டம் 'சுர்ர்’னு ஏரிக்கரை மேலே சீறி வருது பார்க்கப் பார்க்கப் பையனுக்கு அலுக்காது. ஆனால் இப்போ முகத்தில் அடையாளமே இல்லே.

ஆளை அப்பன் தன்னோடு தூக்கிட்டுப் போயிட்டான். உசிர்மட்டும் இருக்கேன்னு பெத்த வவுறைப் புரளிப் பண்ணுது. கார்த்திக்குக் கார்த்தி சரியா வருசம் ரெண்டாச்ச. இப்படியேதான் இருக்கான். இதிலிருந்து என் மவனே உனக்கு விடுதலையில்லையா? என் கண்ணு கடைசி வரை இப்படித்தானா?”

கழுத்து தொங்கிட்டுது; தோள் குலுங்குது. சின்னவர் களத்திலிருந்து எழுந்து வந்து இடது கையாலே அண்ணனை அணைச்சுக்கிட்டாரு. நான் திருடனாட்டம் இலையிலிருந்து எழுந்துட்டேன். கூடவே பையனும். அவனுக்கும் கைகழுவி முகம் துடைச்சு கால் துடைச்சு நான் திண்ணையில் வந்து குந்திட்டேன்.

ஆண் அழுதா பெண்டுங்க அழுவற மாதிரியில்லே. ஒரு ஆண் வாய்விட்டு அழும்படி ஒரு கஷ்டம் இருந்தால் அது உலகத்துக்கே நல்லதில்லே. ஆண்டவனே அழுதா பூமிக்குத் திக்கேது? இங்கே ஏன் வந்தேன்? இது தாங்க, இன்னும் பத்து நாள் பட்டினி தாங்கலாம். இந்தப் பிச்சைப் பிழைப்பிலே பட்டினி பழக்கமில்லாப் பழக்கமா?

அள்ளிச் சொருவின கொண்டையாட்டம் கருக்கல் திரண்டு தன் உள்ளுக்கே உளையுது. அதிலே திருகு பில்லையாட்டம் நிலவு சின்னதா பதியுது.

உள்ளே பையன் குரல் கேக்குது. விக்கி விக்கி அழுவறான். அண்ணி அண்ணன் தம்பி எல்லாம் சேர்ந்து கிசுகிசுன்னு பேசுறாங்க.

"உஷ்-உஷ்"

“ஊஹும்"

“நான் மாட்டேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/176&oldid=1290252" இலிருந்து மீள்விக்கப்பட்டது