பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 உபதேசம் வார்த்தைகளைத்தான் உச்சரித்துக் கொண்டிருந்தார். அவர் அருகே ஒரு தூணைப் பிடித்துக் கொண்டிருந்த ஜடாமுடி சிஷ்யர், மக்களைத் துரிதப்படுத்திக் கொண்டிருந்தார். சிலர் கொடுத்த பழ வகைகளை, சாமியார் வாங்கிக் கொண்டார். கார்த்தி, சாமியாரை நெருங்கிக் கொண்டிருந்தான். உடலெங்கும் பக்தி பரவ, அலைப் பிரவாகத்தில், கனவுலகில் சஞ்சரிப்பவன்போல் நகர்ந்தான். இளமையிலேயே அவனுக்கு ஒரு தெய்வ வழிபாடு. சினிமாவுக்குப் போவதும், சிகரெட் பிடிப்பதும் இளைஞர்களுக்கு டைவர்ஷனாக இருக்கையில், அவன் பக்தியை, இறை உணர்வை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டதால், அவனுக்கு, ஒரு போக்கானவன்' என்ற பெயரும் கிடைத்தது. அவனைப் போல் நல்ல வேலையில் அமர்ந்திருக்கும் இளைஞர்கள், மேல் பதவிக்குப் போவது போலவும், வீட்டில் இரண்டு 'ஆர்டர்லிகள் இருப்பது போலவும் கற்பனையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது, அவனோ, பழனி கோவிலில்தான் உட்கார்ந்து இருப்பது போலவும், சிதம்பரத்தில், ஆடலரசன் நர்த்தனம் புரிவதை, தான் கண்டு களிப்பது போலவும் பாவித்துக் கொள்வான். ஆகையால், மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழும் அந்த மகானைப் பார்ப்பதற்காகவே, அவன் சென்னையில் இருந்து வந்தான். சித்திக்கும், முக்திக்கும் கருவூலமாக விளங்கும் அந்த மகானின் ஞானப் பாற்கடலில் ஒரு குவளையை மொண்டு கொள்ள மனமில்லாதவர்களாய், அவரால் எப்படி இத்தகைய தெய்வீக நிலைக்கு உயர முடிந்தது என்பதை அறிய எண்ணமில்லாதவர்களாய், பக்தகோடிகள் தத்தம் அற்ப கஷ்டங்களை அந்தப் பற்றற்ற ஞானியிடம் கூறிக் கொண்டிருப்பதைப் பார்த்து, கார்த்திக்கு, அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது கார்த்தி, சாமியாரின் முன்னால் போய் நின்றான். கற்பூரத்தை ஏற்றிவிட்டு, அவரது பாதத்தை தொட்டு