பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகவுரை


- o சென்னைப் பல்கலைக் கழகத்

தமிழ்த் துறைத் தலைவர்

    பேராசிரியர் 

திரு ரா.பி. சேதுப்பிள்ளை

ஆங்கிலப் பூங்காவிலேயுள்ள கவிதை மலர்களில் நாற்பத் தேழு நறுமலர் எடுத்து, நல்ல தமிழ் மாலையாகத் தொடுத்துத் தமிழகத்தாருக்கு கையுறையாக வழங்குகிறார் அன்பர் திரு. பொ.திருகூடசுந்தரனார் அவர் அருந்தமிழும் ஆங்கிலமும் நன்கறிந்தவர்.தமிழ்ப் பழனத்திலே பல்லாண்டுகளாக உழைத்து வரும் நல்லறிஞர். "தாமின்புறுவது உலகின்புறக்கண்டு" மகிழும் தகைமை சான்றவர்.

விழுமிய செஞ்சொற் கவிதையிலே ஒர் ஒளியுண்டு என்பர் அத்தகைய ஒளி நலம் குன்றாது மற்றொறு மொழியிலே அதனைப் பெயர்த்தமைத்தல் எளிதன்று. இதனை உணர்ந்த இந்நூலாசிரியர் ஆங்கிலப் பாடல்களைத் தமிழ்ப் பாட்டாக்கித் தர விழைந்தாரல்லர்; சிறந்த கருத்துக்களை எதுகை மோனைச் சிறையிலே மாட்டிச் சீரழித்தாரல்லர். உரைப் பாட்டாக அவற்றை மொழி பெயர்த்தனர்; பொருள் பெயர்த்திலர்.

நூலின் முதற் பாகத்திலே காண்பது குழந்தைக்கவிதை. இளங் குழந்தைமன்னன் அரசு வீற்றிருந்து ஆளும் கோலம் ஒரு பாட்டிலே காட்டப் படுகின்றது.