பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


அரசியல், வாழ்க்கை முதலிய சூழல்களையும் பொறுத்தே பொருள்படுத்திக் கொள்ள வேண்டிய ஒன்றாகவே ஆகும். இவ் விடத்தில் மறைந்த நயன்மைக் கட்சித் தலைவர் வயவர் அதி. பன்னிர்ச்செல்வம் என்னும் தமிழர் தலைவரின் கூற்றை எச்சரிக்கையை நாம் நினைவுகூர்தல் நல்லது. “ஆரியப் பார்ப்பனர்கள் தேவையின் பொருட்டே தமிழைப் பயன்படுத்துகின்றனர் அஃதாவது ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வதைப் போல. மற்றபடி அவர்கள் சொந்த மொழியாகக் கருதுவது சமசுக்கிருதத்தையே. ‘தமிழைவிடச் சமசுக்கிருதமே மேல்’ என்பதே அவர்களின் முடிந்த முடிபாகும்” – என்பது அவர் கூற்று.

அரசியல் அதிகார நிலையில் பிராமணர்கள் எத்தனைக் கூறுகளாகப் பிரிந்து கிடந்தாலும், அவர்கள் மொழியாகிய சமசுக்கிருதத்தைக் கருதுகின்ற வகையிலும், அதனைக் கட்டிக் காத்து அதன்வழிப் பிராமணியத்தைப் பேணுகின்ற வகையிலும், அவர்களை வேறுபட்டவர்களாகக் கருத முடியாது என்பதற்கு மேற்கண்ட அடிப்படை உணர்வுண்மையே கரணியமாகும். காலஞ்சென்ற இராசாசிக்கும், காந்திக்கும், நேருவுக்கும், அவர்களின் அரசியல் பிறங்கடையினரான கிருபளானிக்கும், தேசாய்க்கும், இந்திராகாந்திக்கும் அரசியல், பொருளியல் கொள்கைகளில் அவற்றின் நடைமுறைகளில், எவ்வளவு மாறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள், மந்த விரைவுப் போக்குகள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் பிராமணர்களாகையால், சமசுக்கிருத மொழியைப்பற்றியும், வேதங்களைப் பற்றியும், இந்துமதக் கோட்பாடுகள் பற்றியும் அவர்களிடத்தில் எந்த வகையான வேறுபாட்டையோ, மாறுபாடான நடைமுறையையோ எவரும் காணமுடியாது. அவர்கள் இனத்தைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவரும் பிராமண இனக் காவலர்களே! இக்கருத்தை எந்தச் ‘சூத்திர’ சுப்பிரமணியமோ, ‘அநும’ பத்தவச்சலமோ, ‘வீடண’ மா.பொ.சியோ, ‘பிரகலாத’க் கண்ணதாசனோ, வேறு எவருமோ மறுத்துவிட முடியாது. மற்றபடி, அவர்களுக்கியைபாக இவ்வடிமை மக்கள் எழுதிக் காட்டும், அல்லது பேசிக் காட்டும், ‘அர்த்தமுள்ள இந்துமதக்’ கருத்துகளெல்லாம், அவர்களின் அடிமைத்தனத்தின், அல்லது அறியாமையின் அல்லது பணத்திற்குப் பவ்வீதின்னும் குணக் கீழ்மையின் வெளிப்பாடுகளாகவே இருத்தல் முடியும்.

சமசுக்கிருத மொழி பேணுதல் எவ்வாறு இவ்வாரிய வடவராட்சியில் நடைபெற்று வருகிறது என்பதற்கு இதற்கு முன்பும் சில சான்றுகளைக் காட்டியுள்ளோம். இன்னொரு வெளிப்படையான செய்தியையும் ஒரு சான்றாக இங்குக் காட்டுகிறோம். இந்தியாவில் ஏறத்தாழ இக்கால் 85 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில்