பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

233


விளையாட்டுப் போட்டிகளிலும், தேவையற்ற மதவிழாக்களிலும், திரைப்படப் பொழுதுபோக்குகளிலும் திசை திரும்புமாறு, அத்தகைய செயல்களுக்கு அளவிறந்து ஊக்கமளிக்கும் போக்கு அண்மைக் காலங்களில் மிகுதியாக ஏற்பட்டு வருகிறது. இதை இந்திரா காந்தியே திட்டமிட்டுச் செயற்படுத்தி வருகிறார். தம் கருத்துகளும், உருவமும் மக்களிடையே நன்கு விளம்பரமாகும்படி, வானொலி பரப்புதல்களை நேரம் மிகுவித்தும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கூடுதலாக்கியும் மிகத் தந்திரமாகச் செயற்பட்டு வருகிறார். தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் மளமளவென்று பேரூர்களிலெல்லாம் அமைக்கப் பெற்றும் விரிவாக்கப் பெற்றும் வருவதை மக்கள் உணர்வர். இந்த நிலைகளெல்லாம் அவரின் மக்கள் சாய்காலை மிகுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளே! பொதுமக்களின் நன்மை கருதியே இத்தகைய செயற்பாடுகள் நடந்துவருகின்றன என்பதெல்லாம் ஒரு போலியான விளம்பரமே!

இந்துமதம் கடந்த காலங்களில் மக்களிடையில் எவ்வளவு முன்னேற்றத் தடையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைச் சிறிதே வரலாற்றறிவும் நடுநிலையுமுள்ள எவரும் தெளிவாக உணர்வர். அம்மதத்திற்கே வலிவான அடித்தளங்களாக அமைந்துள்ள புராணங்கள், இதிகாசங்கள் முதலிய மூடநம்பிக்கைகள் மிகுதியும் உள்ள கதைகள் யாவும் பல கோணங்களில் எழுதப்பெறுவதும், நாட்டியம், நாடகம், இசை என்னும் கலைகளில் அவை ஊடுருவி அளாவி நிற்கும் நிகழ்ச்சிகளை, வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றுள் அளவிறந்து புகுத்திப் பொதுமக்களின் மனங்களை அவை தம்வயப்படுத்திக் கொள்ளும்படி செய்வதும், அவர்களின் சிந்தனைகளை நாட்டில் நடைபெறும் அரசியல், பொருளியல் வீழ்ச்சிகளிலும், சூழ்ச்சிகளிலும் ஈடுபடாதபடி திசைதிருப்பம் பண்ணுவதும், கூர்ந்து நோக்கும் திறனுள்ள நாட்டுநலன் கருதும் நல்லவர்களுக்கு விளங்காமற் போகா.

முன்னைவிட, இந்துமத விழாக்களுக்கு இப்பொழுது பெரிதும் விளம்பரங்கள் அளவிறந்து கொடுக்கப்பெறுகின்றன். விநாயக சதுர்த்தி, இராம நவமி, கிருட்டிண செயந்தி, விசயதசமி போலும் கடவுளர் விழாக்கள் முன்பு அவ்வளவாகக் கொண்டாடப் பெற்றதில்லை. இக்கால் அவற்றிற்குத் தேசிய மதிப்புக் கொடுக்கப் பெறுவதும், வானொலி, தொலைக்காட்சிகளில் அவற்றின் நேர்முக வண்ணனைகளும், காட்சிகளும் இடம்பெறுவதும் கொடுமையிலும் கொடுமை! ஒருபுறம் அறிவியல் வளர்ச்சியிலும், விண்வெளி