பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


நாடகமேடைகள், காலக்கழிப்பு(காலட்சேப) மேடைகள் எல்லாவற்றிலும் சமற்கிருத மொழியை வளர்க்கவும் பரப்பவும் படுகுழிக்கு வித்திடும் பார்ப்பன நெறிமுறைகளை வளர்ப்பதும், மக்களிடையே செல்வாக்கிழந்துவரும் இராமாயண, பாரதப் பழங்கதைகளைப் பேசி அவர்களை மதிமயக்குகளில் ஆழ்த்தி வருவதும் எதைக் குறிக்கின்றன? அரசினர் சார்பில் இயங்கி வரும் தொழிற்கூடங்கள், திட்டத் தொழில்கள் முதலிய யாவற்றிலும் தங்கள் தங்கள் இனத்தாரான பூணுால் திருமேனிகளையே அமரச் செய்வதும், அவர்களுக்கு ஏதாகிலும் ஒரு தீங்குவரின் உடனே உயர்நெறி மன்றம், தலைமையமைச்சர், குடியரசுத் தலைவர் முதலிய பேரிடங்களில் முறையிடுவதும் எதனைக் காட்டுகின்றன. தமிழகத்துள் பார்ப்பனர் மீண்டும் தங்கள் கைவரிசைகளைக் காட்டத் தொடங்கிவிட்டனர் என்பதைத் தானே? இவையெல்லாவற்றிற்கும் காரணமென்ன?

தமிழன் மொழியடிமைப்பட்டு, அரசியல் அறியாமையுள் அழுந்தி, பதவிப்பித்துத் தலைக்கேறி, தன்னலத்திற்காகத் தன் மனைவி, மக்கள், நாடு, நலங்கள், மொழி, முன்னேற்றங்கள் முதலிய யாவற்றையும் அடகுவைக்கத் துணிந்துவிட்டான் என்பதாலன்றோ மீண்டும் பார்ப்பணியம் தலையெடுத்து வருகின்றது. இவற்றைப் பற்றி எல்லாம் எண்ணுகையில் நமக்கு ஆக்க வேலைகள் எவற்றிலும் கவனம் செல்லுவதில்லை. அரசியல் காரணங்களுக்காகச் சாணக்கிய மூளைகளை அணைக்கத் துணிகின்ற தமிழர்களே! பதவிப் பித்திற்காகக் கழுதைகளின்பின் கற்பூரந் தேடிப்போகும் குருடர்களே! நீங்கள் மானமுள்ளவர்கள் தாமா? இனநலம் காப்பவர்கள்தாமா? உங்களால் தமிழும் தமிழரும் முன்னேற வழியுண்டா? எண்ணிப் பாருங்கள்!

–தென்மொழி சுவடி : 4, ஓலை : 8, 1966