பக்கம்:உத்தரகாண்டம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196   ✲   உத்தரகாண்டம்

காலத்தில்தன் குழந்தையையும் எடுத்துக் கொண்டு அடிக்கடி வந்தாள். மகள் போன சோகத்துக்கு, இவள் வந்து பழகியது ஆறுதலாக இருந்தது. குழந்தை நிசா நல்ல அழகு. சுருண்ட முடி. கருவண்டுக் கண்கள். எல்லோரிடமும் மழலை சிந்திப் பழகும். இவள் விரலைப் பற்றிக் கொண்டு “போலாமா?” என்று கேட்கும்.

“நான் கடைக்குப் போறேன், நீ வரியாடா கண்ணு?” என்பாள்.

“தாயம்மா, அவ கடையில் வந்து கண்டதையும் வாங்கிக்குடுன்னு கேப்ப... எங்கும் போவாணாம். உக்காரு. பாட்டிக்கு காக்கா வட கத சொல்லு” என்று அநு பேச்சை மாற்றுவாள்.

ஆனால் அப்போது குழந்தை வரவில்லை... அவள் மட்டுமே வந்திருந்தாள்.

“அப்பா?...” என்றாள்.

“வாம்மா?...”

அவர் அருகில் பாயில் உட்கார்ந்தாள்.

“வெரி ஸாரி அப்பா, எனக்கு வழி தெரியல. அங்கே வந்திட்டார்.” கூடத்துத் தூணில் சாய்ந்தவாறு நின்ற அம்மாவுக்கு அப்போதுதான் புரிந்தது போலும்!

“அநு... உன் சித்தப்பாவா?”

“ஆமாம். சத்தம் போடாதீங்கம்மா. இவர் போலீசுக்குப் பயந்து வந்திருக்கிறார். காலேஜில படிக்கிறபோதே ஆர்.எஸ்.எஸ்.ல சேர்ந்திட்டாரு. எங்க பாட்டி, நினைச்சா கண்ணீர் விடுவா. அப்பவே சந்நியாசம் வாங்கிட்டாங்க. ருஷிகேசத்தில இருந்தார். இப்ப கிளம்பிட்டாரு...”

“ஏம்மா, உன் கல்யாணத்துல வந்திருந்தாரே? டில்லில... ராதா கூட வந்திருந்தா. எல்லாரும் காவி - சந்நியாசின்னா விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணினாங்க...” என்று அய்யா நினைவூட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/198&oldid=1050074" இலிருந்து மீள்விக்கப்பட்டது