பக்கம்:உத்தரகாண்டம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   205

வாழவைக்கும் ஒரு தொடக்கத்துக்கான மணமாலைக்கும் பயன்படும் பூக்கள்... ஆனால், மாலைகள் கட்சிகளின் வெற்றிச் சின்னங்களாக, அழுக்குப் பிரதிமைகளை அலங்கரிக்கும் கட்சி மாலைகளாக... மிதிபடும் பூக்களாக, புழுதியில் வீசப்பட்டுக் கருகும்...

நெஞ்சைச் சுமை அழுத்துகிறது. இலக்குத் தெரியாமல் ஒவ்வொரு பிரதிமையின் முன்னும் நின்று மீள்கிறாள்.

பெரிய இடமாக இருப்பதால், கூட்டம் இல்லை போல் தோன்றுகிறது. ஆனால், பிரதான மண்டபத்தின் முன் ஐம்பது பேருக்குக் குறையாமல் வந்திருப்பது தெரிகிறது.

வெள்ளை வேட்டி அணிந்த ஒரு பிரும்மசாரி போன்ற இளைஞர் பூசை செய்கிறார். அவர் என்ன மந்திரம் சொல்கிறார் என்பது செவிகளில் விழவில்லை.

பிரதானமான இராஜராஜேசுவரி - அம்மனைப் பூசித்த பிறகு, பதினாறு வடிவங்களுக்கும் அவர் பூசை செய்கிறார். ஆங்காங்கு அவருடன் பூசையைப் பின்பற்றுவதுபோல சில பக்தர்கள் நகர்ந்த வண்ணம் இருக்கின்றனர். அப்போது, வெளிப்பக்கம், திண்ணை விளிம்பில் நின்று, பார்க்கும் வித்தியாசமான ஒருவனை அவள் பார்க்க நேரிடுகிறது. ஒல்லியாக, கூன் விழுந்த முகம். வெள்ளை வேட்டி... கதர்... கதர்சட்டை வழுக்கையில்லை; முடி தும்பைப் பூவாக இருக்கிறது.

அவன் முகத்தைப் பார்க்கும் ஆவலில் அவள் அதே இடத்தைச் சுற்றி வலம் வருவது போல் வருகிறாள். முன்பக்க வாயிலில் பெரிய மணி தீபாராதனை என்றழைக்க சுநாதமாக ஒலிக்கிறது. அவன் திரும்புகிறான். அவளும் பார்க்கிறாள்.

கழுத்துமணி தெரிய... நெற்றியில் பச்சைக்குத்துடன்...

“என்னம்மா, பாக்குறீங்க?... எனக்கும் பாத்தாப்புல இருக்கு..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/207&oldid=1050137" இலிருந்து மீள்விக்கப்பட்டது