பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181


தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என எண்ணிப் பார்ப்பதுண்டு. நாமும் ஒரு காலத்தில் சினிமாப் படத்தில் நடிக்க நேருமென நாங்கள் அப்போது கனவு கூடக் காணவில்லை.

பிரதாபச்சந்திரன்

சேலத்தில் பிரதாபச்சந்திரன் நாடகம் தயாராயிற்று. இந்நாடகம் பல ஆண்டுகளுக்கு முன் இராமசாமி ராஜா என்பவரால் எழுதப் பெற்றது. திரு. கந்தசாமி முதலியாரே இந்நாடகத்தைப் பயிற்றுவித்தார். நான் பிரதாபச்சந்திரனில் விசுவாசகாதகன் என்னும் பாத்திரத்தை ஏற்றேன். பெயரே பாத்திரத்தின் பண்பை உணர்த்துகிறதல்லவா? நான் முதன் முதலாகத் தியோனாக வேடம் தாங்கியது இந்த நாடகத்தில்தான். இந் நாடகத்தை மொத்தம் நான்கு முறையே நடித்திருக்கிறோம். தொடர்ந்து நடைபெறவில்லை. காரணம், இது பெரும்பாலும் டம்பாச்சாரி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இளஞ்சிறுவர்களுக்கு வேண்டாத பல கருத்துக்கள் இந்நாடகத்தில் இருந்தன. சிறுவர்கள் இந்நாடகத்தில் நடிப்பதை ரசிகர்கள் அவ்வளவாக வரவேற்கவில்லை. உரையாடல்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய பல மொழிகளைக் கொண்டிருந்தன. இந்நாடகத்தில் எம். கே. ராதா, முழுவதும் தெலுங்கு பேசும் செட்டியாராக ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தை ஏற்று, அற்புதமாக நடித்ததை என்னால் மறக்க முடியவில்லை.

ரயில்வேயில் லஞ்சம்

சேலத்தில் சந்திரகாந்தா நாடகம் பாடம் கொடுக்கப் பெற்றது. ஒத்திகையும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அடுத்த ஊரில் அரங்கேற்றமாகும் என நம்பிக் கொண்டிருந்தோம். இந்த நேரத்தில் கம்பெனி பெங்களுருக்குப் புறப்பட்டது. பெங்களுர் கண்டோன்மெண்ட் லக்ஷிமி தியேட்டரில் நாடகங்கள் நடத்தினோம். இங்கு நாடகம் தொடங்கு முன்பே சிறிது தொல்லை ஏற்பட்டது. சேலத்திலிருந்து சீன் சாமான்களைக் கூட்ஸ் வண்டியில் ஏற்றிவிட்டு, நாங்கள் பெங்களுருக்குப் போய் விட்டோம். சாமான் குறிப்பிட்டபடி வந்துவிடுமென்று நம்பி