பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198


பேசிவந்தார் பெரியண்ணா. எல்லோரும் பொள்ளாச்சிக்குப் புறப்பட்டோம். வாத்தியார் கந்தசாமி முதலியார் தனி வீட்டில் இருந்தார். அவரும், மற்றும் சில முக்கியமான நடிகர்களும் இரண்டு நாட்களுக்குப்பின் வருவதாகச் சொன்னார்கள். ஒரு சிலர் சொந்த ஊருக்குப் போய் வருவதாகப் புறப்பட்டுச் சென்றார்கள். நாங்கள் பொள்ளாச்சி வந்து சேர்ந்தோம். முதல் நாடகத்திற்குச் சுவரொட்டிகள் அடிக்கப் பெற்றன. விளம்பர அறிவிப்புகளும் தயாராயின. திருச்சூரில் தங்கியவர்கள் வருகைக்காகக் காத்திருந்தோம். குறித்தபடி இரண்டு நாட்களாயின. யாரும் வரவில்லை. ஊருக்குப் போனவர்களிடமிருந்தும் எவ்விதத் தகவலும் இல்லை. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த நிலையில் திருச்சூரில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம், இடி போன்ற ஒரு அதிர்ச்சியான செய்தியைத் தாங்கி வந்தது. திருச்சூரில் தங்கியவர்களும், ஊருக்குப் போவதாகப்புறப்பட்டவர்களும் ஆக எல்லோருமாகப் பதினாலு பேர்கள்-வேறு ஒரு கம்பெனியில் முன்பணம் வாங்கிக் கொண்டு மங்களுருக்குப் போய்விட்டார்கள் என்று அக்கடிதத்திலிருந்து தெரிய வந்தது. நாங்கள் சிறிதும் எதிர்பாராத இந்தச் செய்தி எங்களைத் திடுக்கிடச் செய்தது. வாத்தியார் கந்தசாமி முதலியார், அவரது புதல்வர் எம். கே. ராதா, கே.பி. காமாட்சி, கே.கே. பெருமாள், எம். ஆர். சாமிநாதன், நன்னிலம் நடராசன் உள்ளிட்ட பதினாலு பேர்களைத் திடீரென்று இழந்த நிலையில் எப்படி நாடகங்களை நடத்த முடியும்?

துரோகத்தில் சிக்காத தூயவர்

ஊருக்குப்போன சில நடிகர்களின் பெட்டிகளைத் திறந்து பார்த்தோம். சில பெட்டிகளில் ஒன்றுமே இல்லை. இரண்டொரு பெட்டிகளில் வெறும் காகிதக் குப்பைகள் கிடந்தன. ஒருவர் மிகவும் புத்திசாலி. பெட்டி கனமாக இருப்பதற்காக அவர் இரண்டு, கனத்தபெருங்கற்களை உள்ளேவைத்திருந்தார். இவ்வளவு பெரிய துரோகத்தை எங்களில் யாரும் கனவுகூடக் காணவில்லை.

ஆனால் ஒருவருக்கு மட்டும் இப்படி நடக்குமென்று முன்னாடியே தெரிந்திருந்தது. அவரையும் ஓடிப் போனவர்கள்,