பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தேவி பால ஷண்முகானந்த சபா


நாகர்கோவிலில் எங்களுக்கு அமைதி ஏற்படவில்லை. தங்கைமார்கள் இருவரும் சிற்றப்பாவின் பராமரிப்பில் மிகவும் கஷ்டத்துடன் காலம் கழித்து வருவதை அறிந்தோம். நாங்கள் மாதம் மாதம் ஒழுங்காகப் பணம் அனுப்பியும் அவர்களுக்கு நிம்மதியான வாழ்வில்லையென்பதை அறிந்தபோது எங்கள் உள்ளம் வேதனைப்பட்டது. எதுவும் செய்ய முடியாத நிலையில் புழுங்கினோம்.

நாகர்கோவிலுக்கு நாங்கள் வந்த ஒரு மாதத்திற்குள் கொரடாச்சேரியைச் சேர்ந்த தர்மராஜபிள்ளை என்பவர் எங்களைச் சேர்த்துக் கொண்டு தேவி பால ஷண்முகானந்த சபா என்னும் பெயருடன் கம்பெனியை நடத்த முன் வந்தார். அவருடைய அழைப்பை ஏற்றுக் கொண்டோம். அவரைப் பெரிய செல்வந்தர் என எண்ணினோம். சாமான்களையெல்லாம் வாடகை பேசி அவரிடம் ஒப்படைத்தோம். எங்கள் நால்வருக்கும் மாதம் இருநூற்றி ஐம்பது ரூபாய் சம்பளம் தருவதாகத் தர்மராஜபிள்ளை ஒப்புக் கொண்டார். என்.எஸ். கிருஷ்ணன் முதலிய எங்கள் குழுவினருக் கெல்லாம் தனியாகச் சம்பளம் பேசி முடிவு செய்யப்பட்டது. எல்லோருமாகத் தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தோம்.

டி. எம். தியாகராஜன்

தஞ்சையில் தேவி பால ஷண்முகானந்த சபையின் நாடகங்கள் தொடங்கப்பட்டன. டி. எம். தியாகராஜன் என்னும் சிறுவன் புதிதாக வந்து சேர்ந்தான். அவனுடைய அற்புதமான சாரீரமும் சங்கீத ஞானமும் என்னைக் கவர்ந்தன. அபிமன்யு சுந்தரி நாடகத்தில் அவனுக்குச் சுந்தரி பாடம் கொடுக்கப்பட்டது. பாடல்களை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது எனக்கே ஆனந்தமாக