பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

491


உயிர்ச் சத்தான ஒரு சொல்

‘கர்நாடகம்’ என்னும் புனைபெயரில் ரா. கிருஷ்ணமூர்த்தி கல்கியில் எழுதிய விமர்சனத்தில் ஒளவையாராக நடிக்கும் ஷண்முகத்திற்கு இந்த நடிப்புக்காகவே நோபல் பரிசு வழங்கலாம்!’ என்று எழுதினார். நான் அதற்குத் தகுதியுடையவனா, அல்லவா என்பது ஒருபுறமிருக்கட்டும். அந்த ஒரு சொல் எனக்கு எவ்வளவு உற்சாகத்தைக் கொடுத்தது! தொடர்ந்து 50 நாட்கள் ஒளவையாராக நான் நடிப்பதற்கு அந்த சொல்தான் உயிர்ச்சத்தாக... ‘டானிக்'காக இருந்தது என்பதில் ஐயமில்லை. கல்கி மேலும் எழுதுகையில்,

“இந்த நாடகத்தைப் பார்த்து வந்தபோதும் அதன் முடிவிலும் எனக்கு என்ன தோன்றியது என்றால், நம் கையில் மட்டும் அரசாங்க அதிகாரம் இருந்தால் இந்த நாடகக் கம்பெனியையும் இந்த ஒளவையார் நாடகத்தையும் உடனே நாட்டின் பொதுவுடமையாக ஆக்கிவிடவேண்டும் என்பதுதான். ஆம், தமிழ் நாட்டிலுள்ள எல்லாக் குழந்தைகளும் இந்த நாடகத்தைப் பார்த்துவிட வேண்டும். மேற்கூறியவாறு ஒளவை நாடகத்தைப் பொதுவுடமையாகச் செய்யும் காரியத்திற்காக மேற்படி நாடகக் கம்பெனியின் செலவுக்கு சர்க்காரிலிருந்து வருஷம் மூன்றுலட்சம் ரூபாய் நன்கொடை கொடுக்கும்படி இருக்கலாம். இந்த மூன்று. லட்ச ரூபாய்ச் செலவினல் தமிழ் நாட்டின் குழந்தைகள் எத் தனேயோ பல லட்ச ரூபாய் செலவில் அடைய முடியாத நன் மைகள் அல்லவா அடைந்து விடுவார்கள்! ஒளவையார் நாடகம் தமிழரின் வாழ்வையே உயர்த்தக் கூடிய நிர்மானத் திட்டத்தைச் சேர்ந்தது.”

என்று குறிப்பிட்டிருந்தார். அன்பர் நாரண-துரைக்கண்ணன் அவர்கள் தமது பிரசண்ட விகடன் இதழில் எழுதிய நீண்ட விமர்சனத்தில், “தமிழில் நாடகமில்லை என்று பிதற்றும் மேதாவிகள் ஒளவையார் நாடகத்தைப் போய்ப் பார்க்கட்டும். ஸ்ரீபால ஷண்முகானந்த சபை நாடக அரங்கில் நாடகக்கலை சீரிளமைத் திறங் குன்றாது இருப்பதை அவர்கள் காண்பார்கள்” என்று சுட்டிக் காட்டியிருந்தார். இவ்வாறு ‘எழுதப்பட்ட விமசனங்களின் உந்துதலால் ஒளவையார் தொடர்ந்து, நடைபெற்று வந்தது.