பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

492


தலைவரைச் சந்தித்தேன்

எங்களோடு மிகநெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ‘ஜன சக்தி’ வார இதழில் 18.6.45இல் ஔவையார் விமர்சனம் வந்திருந்தது. ஜனசக்தியிலிருந்து யாரும் நாடகம் பார்க்க வரவில்லையாதலால், எழுதியவர் யாரென்று பார்த்தேன். ம. பொ. சிவஞான கிராமணி என்று போட்டிருந்தது. விமர்சனத்தைப் படித்தேன். நாடகத்தைப் பாராட்டி விரிவாக எழுதிவிட்டு இறுதியாக ஒன்று குறிப்பிட்டிருந்தார் விமர்சகர்.

“டி.கே.எஸ். சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள். நாடகத்தின் இறுதியில் ‘ஒளவையார்’ விண்ணெய்தும் முன்னார், தமிழர் மேன்மையை விளக்கும் பாடலொன்றைப்பாடி, ஜனங்கள் கொட்டகையை விட்டுச் செல்லும்போது அவர்கள் காதுகளில் தமிழோசையை முழக்கித் தமிழுணர்ச்சியை யூட்டுவது நல்லது.”

இதைப் படித்தவுடன் எனக்குச் சிறிது வியப்பாகவே இருந்தது. முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டின் பெருமையும் தமிழ்மொழியின் சிறப்பும் நாடகம் முழுதும் பேசப் பெறுகிறது; பாடப் பெறுகிறது. இதைப் பார்த்த பிறகும் மன நிறைவு பெறாமல் வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே என்று யோசித்தேன். அப்போதுதான் சில நாட்களுக்கு முன் அவரைச் சந்தித்ததும் பேசியதும் நினைவுக்கு வந்தது. 26.6.45 அன்று மாலை பொதுவுடமைக் கட்சித் தலைவர் தோழர் பி. இராமமூர்த்தி எங்களைப் பார்க்க வந்தார். அவரோடு முன்பே எங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இராமமூர்த்தியோடு ஒல்லியான உருவமுடைய மற்றொருவரும் வந்தார். வந்தவருடைய அடர்ந்த கம்பீரமான மீசை என் கவனத்தைக் கவர்ந்தது. தமிழனுக்குரிய வீரம் அவருடைய கண்களிலே பளிச்சிட்டது. உற்று நோக்கினேன். இவர்தான் ம.பொ. சிவஞான கிராமணியார் என்று அவரை அறிமுகப்படுத்தினார் இராமமூர்த்தி. இப்படித்தான் நான் முதன் முதலாக தலைவர் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்களைச் சந்தித்தேன். அன்றிரவு நாடகத்திற்கு அவரையும் அழைத்துவரும்படி தோழர் இராமமூர்த்தியைக் கேட்டுக் கொண்டேன். அதன்படி இரவு அவரும், ம.பொ. சியும், இஸட், அகமது என்னும் தோழரும்