பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

25


ஆண்டு செப்டம்பர் மாதவாக்கில் இதே வீட்டுக்கு முன்பு கலைஞருக்கும் எனக்கும் நடைபெற்ற கடுமையான வாக்குவாதம் அவருக்கு நினைவுக்கு வந்து அந்த இடத்தை அவர் அனிச்சையாக பார்க்கிறாரோ என்று கூட நினைத்தேன். அவர் சாதரணமாகத் தான் பார்த்திருப்பார். ஆனால், எனக்கோ ‘எந்த முகத்தோடு இங்கே வந்தே’ என்று அவர் கேட்பது போல் தோன்றியது. ஒருவேளை எல்லோரையும் போல் நானும் ஒரு பச்சோந்தியாகி மீண்டும் இங்கே வந்திருப்பேனோ என்று அவர் நினைத்திருந்தால் அதில் தவறில்லை.

என்னால் அவர் முகத்தை நேருக்கு நேராய் பார்க்க முடியவில்லை. ஆகையால், உள்ளே உள்ள வரவேற்பறைக்குள் நுழையப் போனேன். அதன் வாசல்படிக்கு மேல் கலைஞரும், அவரது அன்னையார் அஞ்சுகம் அம்மையாரும் தாயும் மகவுமாய் இருந்த படம் என்னை சிறிது நேரம் நிற்க வைத்தது. அய்ந்து வயதிலேயே அம்மாவை இழந்த என் மனம் சிறிது துடித்துப் போனது.

உள் வரவேற்பறையில் சோபா செட்டுகள் போடப்பட்டு இருந்தன. சுவரை ஒட்டிய மேஜையின் இருபக்கமும் இரண்டு கண்ணாடி பேழைகளில் கலைஞரின் தந்தை முத்துவேலரின் படமும், அன்னையாரின் படமும் சிலைகளாக வைக்கப்பட்டு இருந்தன. மேல் சுவரில் திருவள்ளுவர் படம். இன்னொரு பகுதியில், கலைஞர், தனது குழந்தைகளோடு விதவிதமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்... கலைஞரை அந்த வயதில் நான் பார்த்தது இல்லை. இப்போது போல் அவர் தலை வழுக்கையாக இல்லாமல் சுருட்டை முடியோடு அழகாகத் தோன்றியது. அந்த கண்களிலும் ஒரு குறுகுறுப்பும் ஒரு போராளிக் குணமும் தென்படுவது போல் எனக்குத் தோன்றியது.

அந்த அறைமுழுக்க வியாபித்த பார்வையாளர்களைப் பார்த்தேன். ஒரு சிலர் இ.ஆ.ப. அதிகாரிகளாக இருக்கலாம். ஒரு சிலர் தொழிலதிபர்களாக இருக்கலாம். ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே மூழ்கிக் கிடந்தார்கள். கலைஞரை முன் அனுமதியுடன் சந்திக்க வந்திருப்பவர்கள். முதல்வரை சந்திக்கும் போது எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று மனதிற்குள் மாறிமாறி ஒத்திகை போட்டுக் கொண்டிருந்தவர்கள்.

ஒரே ஒருவர் மட்டும் தொப்புள் வரைக்கும் சட்டையில் பித்தான் மாட்டாமல் டாலர் சங்கிலி தோன்ற தனித்திருந்தார்.