பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவயோகம் என்று சொல்ல முடியாது. அவன் நல்ல முறையில் செலவழிக்கா மையினால் அவனைக் கண்டு பெரியவர்களுக்கு இரக்கம் உண்டாகும். அத்தகைய செல்வன் தன் செல்வத்தைச் செலவு செய்யாமல் இருப்பதே மேல் என்றுகூடத் தோன்றும். வீணாகத் தேர்தலில் லட்சக் கணக்காகச் செலவு செய்தல், அடிதடிக்கு ஆயிரம் பதினையாயிரம் என்று செலவு செய்தல், லஞ்சம் கொடுத்தல் முதலிய செலவினங்கள் முறைப்படி நடப்பவை என்று சொல்ல இயலாது. தன்னுடைய இன்பத்தைக் கருதாமல் பொது நலத்தைக் கருதி ஏழைகளுக்கு இரங்கிப் பணத்தைச் செலவழித்தால் அதுதான் நல்ல செலவு ஆகும். அப்படிச் செலவழித்த ஒருவன் ஏழையாகிவிட்டாலும் அவனை மக்கள் பாராட்டுவார்கள். - பாவத்தில் பங்கு பழங்காலத்தில் ஒரு கதை சொல்வார்கள். ஒருவன் தன் கையிலிருந்து நான்கணா ஒர் ஏழைக்குக் கொடுத்தானாம் அப்படிக் கொடுத்தவன் இறந்த பிறகு அவனை நரகத்திற்கு அழைத்துச் சென்றார்களாம். "நான் தர்மந்தானே செய்தேன்? என்னை ஏன் நரகத்திற்கு அழைத்துக் கொண்டு செல்கிறீர்கள்?" என்று கேட்டானாம். 'நீ பாத்திரம் அறிந்து தர்மம் செய்ய வில்லை. அதனால் கொண்டு போகிறோம்' என்று பதில் வந்தது. அவன் ஒன்றும் தெரியாமல் விழித்தான். "நீ கொடுத்த நான் கணாவைக் கொண்டு அந்த ஏழை தூண்டில் முள் வாங்கி மீன் பிடித்தான். நீ அ. .ப் பணத்தைக் கொடுத்தமையினால் பல மீன்களைக் கொன்றான். அந்தப் பாவத்தில் உனக்கும் பங்கு உண்டு"என்று சொன்னார்களாம். இந்தக் கதை அப்படியே நடந்தது என்பதற்காக நான் சொல்லவில்லை. நாம் செலவழிக்கிற பணம் நல்ல முறையில் பயன்படுமா என்பதை நன்கு தெரிந்தே கொடுக்க வேண்டும். இல்லையானால் நாம் கொடுக்கும் பணத்தால் தீமையே விளையும். பணம் செலவிடுவது பெரிது அல்ல. பாத்திரம் அறிந்து, பயன் அறிந்து செலவிட வேண்டும். இந்தக் கருத்தை இக்கதை புலனாக்குகிறது. 1.49