பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 உருண்டு ஓடுதல், குழந்தையின் இடையில் கிண்கிணியைக் கட்டுதல், குறமகளிர் தினைக்கொல்லையைக் காத்தல் ஆகிய வழக்கங்கள் பாட்டிலுள்ள செய்திகளால் தெரியவருகின்றன. இந்தப் புத்தகத்தில் கந்தர் அலங்காரத்தில் வரும் 89-ஆவது பாடல் முதல் 94-ஆவது பாடல் முடிய ஆறு பாடல்களின் விளக்கத்தைக் காணலாம். இந்தச் சொற்பொழிவுகளில் புராணக் கதைகளின் உள்ளுறையை அங்கங்கே விளக்கியிருக்கிறேன். பழைய கதைகளையும் புதிய கதைகளையும் எடுத்துக் காட்டிக் கருத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறேன். ஏற்ற உவமைகளால் பொருளைப் புலப்படுத்த முயன்றிருக்கிறேன். பாடல்களில் வரும் வரலாறுகளைச் சற்று விரிவாகச் சொல்லியுள்ளேன். கண்ண பிரான் வலம்புரியோசை செய்த வரலாற்றை ஐயங்கார் பாக வதத்தைக் கொண்டு விளக்கியிருக்கிறேன். கருத்துக்களை விளக்கும்போது திருக்குறளும், பரிபாடலும், தேவாரமும், திருவாச கமும், பெரிய புராணமும் மேற்கோளாக நின்று துணைபுரிகின்றன. ★ இது அலங்கார மாலையில் 17-ஆவது புத்தகம், இன்னும் இரண்டு புத்தகங்களில் அலங்காரப் பாடல்களின் விளக்கத்தை முடித்து 20-ஆவது புத்தகத்தைக் கந்தரலங்காரம் முழுவதற்கும் உரிய ஆராய்ச்சியாக வெளியிடலாம் என்று எண்ணியிருக்கிறேன். இதுவரையில் இந்தத் தொண்டை நிறைவேற்றிய முருகன் திருவருள், எஞ்சிய மூன்று புத்தகங்களையும் நன்கு நிறைவேற்றி வைக்கும் என்றே எண்ணுகிறேன். வழக்கம்போல் அன்பர் சிரஞ்சீவி அனந்தன் எனக்கு உறுதுணையாக இருந்து சுருக்கெழுத்தில் சொற்பொழிவை எடுத்துத் தட்டெழுத்தில் உதவிபுரிந்து வருகிறார். என்றும் இளையபிரான் திருவருளால் அவருக்கு எல்லா நலங்களும் மேன்மேலும் பெருக உண்டாக வேண்டுமென்று வாழ்த்துகிறேன். கி.வா. ஜகந்நாதன் 2O.O3. 1962 132