பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணைக் கடலாகிய முருகப்பெருமான் திருவருளால் இந்தப் புத்தகத்தோடு கந்தர் அலங்கார விரிவுரைகள் நிறைவி பெறுகின்றன. அலங்காரம் என்ற பெயரோடு முதல் புத்தகம் மலர்ந்தது; உள்ளம் குளிர்ந்தது என்ற பத்தொன்பதாம் புத்தகமாகிய இதனோடு விரிவுரை முடிகிறது. இனி இருபதாவது புத்தகத்தில் கந்தரலங்காரம் முழுவதையும் ஒருங்கே பார்த்துத் தோன்றும் கருத்துக்களையும், அருணகிரியாருடைய சொல்லமைப்பிலும் பொருளமைப்பிலும் உள்ள சிறப்புக்களையும், அவர் சுவையாகக் கருத்தைச் சொல்லும் முறைகளையும், பிறவற்றையும் எழுதலாம் என்று எண்ணியிருக்கிறேன். ஒருவகையில் அந்தப் புத்தகம் முழுவதும் கந்தர் அலங்காரத்தின் ஆராய்ச்சியாக அமைய வேண்டும் என்பது எளியேன் ஆசை. முருகன் திருவருள் நன்கு நிறைவேற்றுமென்று நம்புகிறேன். இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்குமுன் நிகழ்ந்த துயர நிகழ்ச்சி ஒன்றைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. 17-ஆம் மலராகிய இரு விலங்கு என்பதன் முகவுரையில், சிறந்த அநுபூதி மானாகிய ரீ வடகுமரை அப்பண்ண சுவாமிகளைப் பற்றி எழுதி யிருந்தேன். அவர்கள் மிக்க ஆர்வத்தோடு இந்த விரிவுரைகளைப் படித்து இன்புற்று ஆசி கூறுவார்கள், வாயார வாழ்த்துவார்கள். ஆகவே இந்த வரிசை நிறைவேறுவது கண்டு மிகவும் ஆனந்தம் அடைவார்கள் என்று நம்பியிருந்தேன். ஆனால் இறைவன் திருவுள்ளம் வேறாக இருக்கிறது. அவர்கள் சென்ற 1962-ஆம ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி இறைவனோடு இரண்டறக் கலந்தார்கள். நல்ல பாட்டு, நல்ல உரை, நல்ல பண்டம் ஆகியவற்றில் அவர்களுக்கு ஈடுபாடு அதிகம். எல்லோரிடமும் எளிமையாகப் பழகும் அவர்களிடம் குழந்தைத் தன்மை மலர்ந்திருக்கிறது. எத்தனை சமயங்களில் வஞ்சகமின்றி, "இந்த விளக்கம் அருமை யாக இருக்கிறது," "இந்த உவமை அற்புதமாக இருக்கிறது."