பக்கம்:கபாடபுரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

69


"நான் சொல்வது எதுவும் கற்பனையில்லை! எத்தனையோ முறை தங்கள் பாட்டனாருடனும், தந்தையாருடனும் நகர் பரிசோதனைக்கு வந்திருக்கிறேன் நான். உலகியலனுபவத்தில் தங்கள் பாட்டனாரைவிடச் சாமார்த்தியசாலி இனிமேல் பிறந்து வந்தால்தான் உண்டு. சமயோசித ஞானத்தில் அவருக்கு இணை அவர்தான். அவரிடமிருந்தும் நான் கற்ற எதுவும் பயன்படாத கற்பனையாயிருந்து விடமுடியாது இளையபாண்டியரே!"

"அதெல்லாம் உன் சொந்தப் பெருமை! அந்தப் பெருமை இப்போது இங்கு எப்படிப் பயன்படுமென்பதுதான் எனக்குப் புரியவில்லை?"

"இதில் பெருமை எதுவுமில்லை! எல்லாமே அனுபவமும் ஞாபகமும் தான்! நாலைந்து தடியர்களாக இருக்கும் அவர்களை அருகிற்போய் எதிர்க்க இப்போது நம்மால் ஆகாது. தேசாந்திரிகளாகத் தோன்றும் நம்மை ஈவு இரக்கமின்றிக் கொன்று போட்டாலும் போட்டுவிடுவார்கள் பாவிகள்! காவலர்களை எழுப்ப நீங்கள் இங்கிருந்து கூக்குரலிடுவதும் பயன்படாது. எனவேதான் நான் இந்த யோசனையைச் செய்தேன்" என்று கூறிக்கொண்டே கீழே குனிந்து பருமன் பருமனான புன்னைக் காய்கள் ஐந்தாறைப் பொறுக்கிய முடிநாகன் அவற்றைக் கனவேகமாக அருகிலிருந்து புன்னை மரங்களையெல்லாம் நோக்கி ஒசையெழும்படி வீசினான்.

காய்களை வீசியதும் அந்தப் புன்னை மரங்களிலிருந்து பேரோசையோடு புயலெழும்பியதுபோல் கத்தியபடி பறவைகள் மேலெழும்பின. பெரிய பெரிய சிறகுகளையுடைய அந்த கடற்பறவைகள் பெரும் கூட்டமாகப் பறந்துபோய் எதிரே இருந்த கபாடங்களின் குமிழ்களில் அமர்ந்ததும் கணிர் கணிரென்று நகரையே எழும்புவதுபோன்ற மணிஒலிப் பிரளயம் அதிசமாய் நிகழ்ந்தது. கீழே சிலவரிசை மணிகளில் மட்டுமே அவர்கள் பஞ்சு திணித்திருந்தனர். பஞ்சு திணிக்காத மேல்வரிசையின் மற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/71&oldid=489993" இலிருந்து மீள்விக்கப்பட்டது