பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_タ「。 கம்பனும் அரசியலும் இராமாயணக்கதையில் அயோத்தி, கிட்கிந்தை, இலங்கை ஆகிய மூன்று நாடுகளில் நகரங்களில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சிகள் விரிவு படக் கூறப் பட்டிருக்கின்றன. இராமாயணக்கதை நிகழ்ந்த காலம் மன்னராட்சி முறை இருந்த காலம் என்பதை அறிவோம். அயோத்தியில் தசரதனும், கிட்கிந்தையில் வாலியும், இலங்கையில் இராவணனும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்கள் என்பதையும் நன்கு அறிவோம். அரச நீதி என்பது அரசியல் நெறி முறையின் பாற்பட்டதாகும். இன்று அரசியல் என்பது ஒரு அறிவியல் அளவிற்கு சமூகவியலின் பகுதியாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஆதியில் அரசு என்பது எப்போது தோன்றியதோ அப்போதிருந்தே அரசியல் கருத்துக்கள் தோன்றி வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றன. அரசும் அரசியலும் மக்களுடைய நலனுக்காக அமைவதாகும். எனவே அது அறநெறியில், மிகப் பெரும்பாலான மக்களின் நலன்களையும் நலவுரிமைகளையும் காப்பதான அறிநெறியில் அமைய வேண்டும். அறநெறி என்பது தனி நெறியாகவும் பொது நெறியாகவும் தோன்றி வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. அரசியலில் ஆட்சி அதிகாரம் என்பது ஒரு மய்யமான பிரச்னையாக இருந்து வந்திருக்கிறது. யார் கையில் ஆட்சி அதிகாரம் இருப்பது என்பதும் தொடர்ச்சியான பிரச்சனையாக இருந்து வந்திருக்கிறது. மன்னராட்சி முறையில் அரசன் ஆட்சி அதிகாரத்தின் மையத்தில் அமர்ந்திருக்கிறான். அரசன் நல்லவனாக, வல்லவனாக, நீதிமானாக, செங்கோலனாக, மக்கள் நலனையும் நாட்டு நலனையும் காப்பதைத் தனது முக்கியமானதும் முதலாவதுமான கடமையாகக் கருதுபவனாக அமைய வேண்டும். அரசனுக்கு உதவியாகத் துணையாக அமைச்சர்களும், இதர அரசியல் குழுக்களும் அமைய வேண்டும். சிலப்பதிகாரக் காப்பியத்தில் ஐம்பெரும் குழுக்களும் எண்பேராயமும் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. வள்ளுவப் பெருந்தகை தனது பொருட் பாலில் அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்று மூவகைப் பரிவுகளைப் பற்றி விளக்கிக் கூறியுள்ளார்.