பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xv

என்பது அந்தச் செய்யுள். 'மண் தின்ற பாண மென்ற வாய்' என்று சொல்லித் துயருற்றுப் புலம்பினார் அவர்.

இப்படித் தமிழ் நாவலர் சரிதையிலே விளங்குகிறது இந்தத் திருவாரூர் நிகழ்ச்சி. இது இரட்டையர்கட்கும் இவர்க்கும் நடைபெற்றதாகவும் சிலர் கூறுவர்.

கவிராயர், திருமலைராயன் அவையிலும், பற்பல சமயங்களிலும் சொல்லிய தனிச் செய்யுட்கள் பலவும் இந்நூலின் கண் மிளிர்கின்றன. அவற்றைக் கற்று இன்புற முற்படுவோம்.

காளமேகப்புலவர் மூவர் அம்மானை, திருவானைக்கா உலா, சித்திர மடல், ப்ரப்பிரம்ம விளக்கம் என்னும் நூல்களையும் செய்தனர் என்பர். அம்மானை முற்றவும் வெளி வரவில்லை. இவை எல்லாம் தொகுக்கப் பெற்று ஒரே தொகுதியாக அச்சிட்டு வெளிவரவேண்டும். இந்த ஆசை நிறைவேற இறையருள் துணை நிற்கும் என்று நம்புகின்றேன்.

அண்மையில், தென்னாற்காடு மாவட்டத்து எண்ணாயிரம் என்னும் சிற்றுரைச் சேர்ந்த செல்வராசர் என்னும் அன்பர் ஒருவர் வந்தார். தொல்பொருள் துறை அறிஞர் திரு இரா. நாகசாமி அவர்களின் கட்டுரையோடுகூடிய கல்வெட்டு இதழை என்னிடம் கொணர்ந்து தந்தார். காஞ்சி காமாட்சி கோயில் கல்வெட்டு அது.

மண்ணில் இருவர் மணவாளர் மண்ணளந்த
கண்ணனவ னிவன்பேர் காளமுகில்-கண்ணன்
அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே
இவனுக்கூர் எண்ணாயிரம்

என்று காணப்படுகின்றது. இது காளமேகம் பாடல். இதன்படி காளமேகம் எண்ணாயிரம் என்னும் நடு நாட்டுச் சிற்றுாரினர் என்கின்றது அந்தக் கட்டுரை. காளமேகம் பிறந்த ஊர் எது வானாலும் அவர் தமிழ் நாட்டின் எல்லா ஊருக்குமே உரியவர் என்பதையே நினைக்கவேண்டும்.

இந்நூல், பல பதிப்புகள் வெளிவந்து, இப்போது புதிய பதிப்பாக வெளிவருகின்றது.

தமிழன்பர் பேருலகம் இதனை விரும்பி வரவேற்கும் என நம்புகிறேன். தமிழ்க் கவிநயம் காண நினைப்பார்க்கு இஃதோர் நல்லமுதம் ஆகுமென்றும் எண்ணுகின்றேன்.

புலியூர்க் கேசிகன்


@@@