பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்

இன்னா தினியார்ப் பிரிவு”

(1158)

என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

வாழ்வாரும் வீழ்வாரும்

லகப் பொதுமையிலிருந்தே தனிமையும் தோன்றியது. பொதுமை தாயென்றால், தனிமை சேய், பொதுமையும் தனிமையும் அன்பும் ஆர்வமும் உடைய இடத்தில் முரண்பாடுடையன அல்ல. அப்படியன்றி வறண்ட மனப்போக்கு உடையவரிடத்தில் தனிமையும் பொதுமையும் முரண்பாடுடையனவாகி, மோதத்தான் செய்கின்றன. வான்மழை வையகத்திற்குப் பொது. வான்மழைக்கு நாடு, மொழி, சமயம் ஆகிய வேறுபாடுகள் கிடையா. வையகத்தை வாழ்வித்து வாழும் வான்மழைக்கு ஈடேது? இணையேது? ஆதலாலன்றோ, வள்ளுவம் தனக்குவமை இல்லாதவனை வாழ்த்திய பிறகு, வான்மழையையும் சிறப்பித்துப் பேசுகிறது.

இந்தப் பரந்த வையகத்திற்கு வடிவமும், வண்ணமும், வளமும், உணர்வும் அனைத்தும் வழங்குவது வானின் கொடையேயாம். வானம் வழங்காதெனில், இந்தப் பாரினில் பசும் புல்தலையும் காண்பதரிது என்பது வள்ளுவம். ஏன்? மனிதனின் உயர்ந்த வானோர்க்கும் கூட பூசனை கிடைக்காது என்றும் வள்ளுவம் உணர்த்துகிறது. ஏன்? அலைகடலின் வளம்கூட, வானின் வளம் சுருங்கின், சுருங்கும் என்பது வள்ளுவத்தின் முடிவு. ஆதலாலன்றோ அருளாளர்களும் கூட வான்மழையை இறைவன் தன் திருவருளேயென்று போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

வான்மழை வையகத்திற்குப் பொதுவானாலும், பொருளறிந்து போற்றினால்தானே பயனுண்டு! வான்மழை பொழிகிறது. அங்ஙனம் பெய்யும் பொழுது வாரி பெருக்கி ஏரி நிறைத்துப் பயன் கொண்டால்தானே? அங்ஙனம் பயன்