பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


படிகளைப்பற்றித் திருக்குறள் தனித்தனியே ஆய்வு செய்து விளக்குகிறது. சமுதாயத்தின் தொடக்கத்தில் தோன்றிய நூலன்று. எனினும், சமுதாய அமைப்பில் பல்வேறு படிகள் தோன்றியிருந்தாலும், அந்தப் படிவளர்ச்சிகள் நிறைவு பெறாமலும், பூரணத்துவம் அடையாமலும் அவல நிலையிலிருந்த பொழுது திருக்குறள் தோன்றிற்று. திருக்குறள், முறையாக சமுதாயத்தின் பல்வேறு படிகளின் வளர்ச்சி முறைகளைப் பற்றியும், அவை அமையவேண்டிய இயல்புகளைப் பற்றியும் தெளிவாக விளக்குகின்றது. தனிமனிதன், குடும்பம், சமுதாயம், அரசு எனும் முறைவைப்பைத் திருக்குறள் ஏற்றுக் கொள்ளுகிறது. சமுதாயத்தின் மேற்கூறிய அமைப்புகளுக்குள் இருக்கவேண்டிய உறவு முறைகளைத் திருவள்ளுவர் வரையறுத்துக் காட்டுகிறார். அறத்துப்பாலில் தனிமனிதனின் வாழ்க்கைக் கடமைகளை வற்புறுத்திக் கூறுவதோடு, தனி மனிதன் சமுதாயத்தோடு உறவு கொண்டு வாழ்தற்கு இன்றி யமையாத நல்லியல்புகளையும் எடுத்துணர்த்துகிறார். பொருட்பாலில் அரசு, குடி மக்கள் இயல்பு ஆகியவைகளை விரிவாக விளக்குகிறார்.

திருக்குறள் ஒரு நல்ல இலக்கியம், இலக்கியத்திலும் சிறந்த அறநூல்; அரசியல் நூலும் கூட. கற்பனைக் காட்டுக்குள் கருத்துக்கள் ஒளித்து போகாமல் கண்ணாடியின் முன் உருவமென அவை வெள்ளிடை மலையென விளங்கும் வண்ணம் அமைக்கப்பெற்ற நூல். குறைகளைக் காட்டுகின்றார்; ஆனால், அப்பட்ட நிர்வாணமாக அல்ல. குறைகளைக் காட்டும் முயற்சியைவிட நிறைவைக் காட்டும் முயற்சியே திருக்குறளில் மேம்பட்டுள்ளது. திருக்குறள் ஒரு சிறந்த ஒழுக்க நூலாகத் திகழ்கிறது. திருக்குறள் காட்டும் ஒழுக்கம் அதிமானுட (Superman)னுக்கு உரியதன்று. சராசரி மனிதன் கடைப்பிடிக்கக்கூடிய ஒழுக்க நெறிகளை வாழ்க்கையோடு இணைக்க முடியவில்லை என்று யாராவது சொன்னால்