பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

139


இடத்தில் அமைந்திருந்த துறைமுகப்பட்டினம். இத்துறை முகத்தில் சோழப் பேரரசு சுங்கம் என்ற வரி வசூலித்துள்ளது. இத் துறைமுகத்திலிருந்து உலகின் பல நாடுகளுக்கும் பண்டங்கள், கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்பெற்றன. அதுபோலவே, சோழநாட்டிற்குத் தேவையான பண்டங்கள் அவற்றைச் சுமந்துவந்த கப்பல்களிலிருந்து இறக்கி, நாட்டிற்குள் அனுப்பப்பெற்றன.

“நீரினின்று நிலத் தேற்றவும்
நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போரேறி”

(பட்டினப்பாலை 129-137)

என்ற அடிகள் தமிழ்நாட்டிற்கு இருந்த பன்னாட்டுத் தொடர்பை விளக்குவனவாக அமைந்துள்ளன.

ஏற்றுமதி - இறக்குமதி செய்யப்படும் பண்டங்கள் அளந்தறிதற்கு உரியனவாக அமையாமல் அளவிறந்து குவிந்திருப்பதனை “அளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி” என்றும் “பொதிமூடை போரேறி” என்றும் பட்டினப்பாலை ஆசிரியர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டு மக்கள் பல நாடுகளுக்கும் சென்று வாழ்ந்து வந்துள்ளனர். சிவநெறி, தமிழ் நெறியேயாம். இந்தோ-சீனாவில் அங்குர்வாட் (Ankurvat) என்னும் நகரில் ஒரு பெரிய சிவன் கோயில் உள்ளது. இத் திருக்கோயில் கோபுரங்கள் தமிழகக் கோயில் கோபுரங்களைப்போல் உள்ளன. “முக்கட் செல்வர் நகர்” (புறம் - 6) என்று புறநானூறு குறிப்பிடும் கோயில் (நகரம் போல) பெரிய திருக்கோயிலாக