பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இறைவழிபாடு எழுந்தது. “வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்” என மணிவாசகர் இதனை வற்புறுத்துகிறார். காற்றை நாம் சுவாசிப்பதனால் காற்றுக்கு என்ன பயன்? நாம்தான் பயன் பெறுகிறோம்! சோற்றை நாம் உண்பதால் சோற்றுக்கு என்ன பயன்? நாம்தான் பயனடைகிறோம். இவற்றைப் போலவே கடவுளை வணங்குவதால் நாமே பயன் பெறுகின்றோம். உயர்ந்த எண்ணத்தால்வரும் பரம்பரையே குலமாகும். இக்குலத்தை நாம் விரும்புகின்றோம். அதைக்கூட உயர் நிலைப்பட்டோர் கைவிடுவர். ஆதலால் எண்ணம் உயர்ந்ததாகவும் தூயதாகவும் இருப்பதற்குக் கடவுள் வழிச்செல்லல் இன்றியமையாதது.

மனிதகுலம் சுதந்திரமாகச் சுற்றிச் சுழன்று திரிய ஆசைப்படுவதில் வியப்பில்லை. எல்லா இனத்தவருடனும் இணைந்து-பிணைந்து வாழ்வதிலும், உரையாடுவதிலும் உவகை கொள்கிறது மனித இனம். இந்தச் சுதந்திர நோக்குக்கும் முட்டுக்கட்டையாக-தடையாக எது குறுக்கிடுகிறதோ அதை அகற்றி அழிக்கவேண்டுமென்ற வேட்கை உண்டாகிறது. மனிதகுல மேம்பாட்டுக்கும்; சமுதாய உயர்வுக்கும் உகந்த சில கருத்துக்களையும், நடைமுறைகளையும் யாராவது தடுத்தார்களானால் அத்தடையை நீக்க முயற்சிப்பது தன் கடமையென மனிதன் காலப்போக்கில் உணர்ந்து வந்திருக்கிறான். அத்தகைய உணர்ச்சியின் உந்துதல் தான் சுதந்திரப் பற்றை அவனுக்குக் கொடுத்திருக்கிறது. தமிழினம் சுதந்திரத்தைப் பேணிக்காப்பதில் முன்னின்று உழைத்திருக்கிறது. விரிந்த-விசாலமான மனப்பான்மை தமிழினத்துக்கு இருந்தது போலவே-சுதந்திரம் காக்கும் உணர்வும் இருந்தது. நீங்கள் வாழும் ஊர் எவ்விடத்திலுள்ளது? என்று அன்று கேட்டால் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பதில்தான்வரும். அவ்வளவு தூரத்துக்கு அகன்ற நெஞ்சு அப்போதிருந்தது. தன்னைப்போல பிறரை நேசித்து, தன் நாட்டைப்போலப் பிறநாட்டையும் எண்ணி