பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

235


கிறதோ, அத்துறையில் அவ்வினம் மேன்மையுற்று விளங்குவது உலக இயற்கை, வழிவழியாகத் தத்துவஞான அனுபவத்தில் ஈடுபட்ட நமது இனம் அத்துறையில் ஈடும் இணையுமின்றி வளர்ந்திருக்கிறது, காரணம் அத்துறையில் தொடர்ந்து வளர்ந்த சிந்தனையே ஆகும். பொறிகளுக்கும், புலன்களுக்கும் அப்பாற்பட்ட பொருள்களையும், அவ்வழிப்பட்ட அனுபவங்களையும் ஆராய்ந்து, தெளிவாகச் சொன்ன தமிழுக்கு காணும் பொருளை ஆராய்ந்து அவ்வழிப்பட்ட உண்மைகளை எளிதிற் சொல்லுவது இனிமையிலும் இனிமை யென்றே நம்புகின்றோம்.

கல்வி ஆசிரியனால், மாணவனுக்குக் கொடுக்கக்கூடிய ஒன்றல்ல. மாணவன் தானே கல்வி பெறுகிறான். அதற்கு ஆசிரியன் தூண்டுகோலாக அமைகிறான். உதாரணமாக மாணவன் ஒரு வினாக்கேட்டால் அவ்வினாவிற்கு விடை மாணவனே சொல்லவேண்டும். விடை சொல்லத் தெரியாமல் மாணவன் தயங்கினால், ஆசிரியன், அவரசப்பட்டு விடையைச் சொல்லித் தரக்கூடாது. அம்மாணவனையே விடையைச் சிந்தித்துக் காணத் தூண்ட வேண்டும். அங்ஙனம் தூண்டுவதற்காகச் சில துணை வினாக்களையும் ஆசிரியன் செப்பலாம். இந்தத் துணை வினாக்களுக்கு விடைகாணும் முயற்சியிலேயே முன் வினாவுக்கு மாணவன் விடைகண்டு விடுவான். இங்ஙனம் கற்கின்ற கல்வியே தெளிவுடையதாக இருக்கும்; ஆழமாகவும் இருக்கும்; உறுதி யாகவும் இருக்கும். அதுமட்டுமின்றிச் சிந்தனைப் பயிற்சியும் திறமையும் வளம் பெறுகின்றன. நம்முடைய தலைமுறையினரை அறிவியல் துறையிலே, பொருளியல் துறையிலே, தொழிலியல் துறையிலே சிந்தனையில் ஈடுபடவைத்து, வளர்ப்பது தலையாய கடமை. இக்கடமையை முறையாகச் செய்து முடிக்கப் பயிற்சிமொழி தாய்மொழியாகவே இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. சிந்தனை ஊற்று தாய்மொழியாலேயே திறக்கப் பெறுகிறது.