பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விளங்கிக் கொள்ள முடியவில்லை. இந்திய அரசியல் சட்டத்தின்படி மாநிலங்களின் ஆட்சிமொழி மாநில மொழியேயாகும். அதையொட்டி உயர்திரு காமராசர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்தின் ஆட்சிமொழி தமிழ் என்று சட்டம் செய்தார்கள். நடைமுறைக்குக் கொண்டு வருவதிலும், அக்கறை காட்டினார்கள். ஆனாலும் வளர்ச்சி மெதுவாக இருந்தது. இப்பொழுது திடீரென்று ஆங்கிலத்தை இணை ஆட்சிமொழியாக ஆக்கச் சட்டம் செய்யவேண்டியதன் அவசியம் என்ன வந்தது? இப்படி நாம் கூறுவதால் நம்மை ஆங்கில எதிர்ப்பாளர் வரிசையில் சேர்க்க வேண்டியதில்லை; ஆங்கிலம் வளர்ந்த - உலகறிந்த அறிவியல் மொழி, உலகில் பலர் பேசுகின்ற மொழி. ஆங்கில அறிவும் நுட்பமும் அருந்தமிழை வளர்க்க உதவும். தமிழர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கும் உதவும். இதில் எத்தகைய கருத்து வேறுபாடும் கிடையாது. ஆதலால், ஆங்கிலப் பயிற்சி தேவை. தமிழை வளர்க்கும் நோக்கத்தோடு ஆங்கிலப் பயிற்சியை வரவேற்க வேண்டும். ஆனாலும், ஆங்கிலமே எல்லாமும் ஆகிவிடக் கூடாது. ஆதலால், தமிழகத்தில் தமிழிலேயே ஆட்சி நடை பெற வேண்டும். இது, சுதந்திரம் வழங்கிய உரிமைகளில் ஒன்று. ஆங்கிலம் ஆட்சி மொழியாக இல்லாதுபோனால், ஆங்கில அறிவைப் பெற முடியாதா? பெற வேறு வழியில்லையா என்பதைச் சான்றோர்கள் பரிசீலனை செய்ய வேண்டும். மத்திய ஆட்சியில் ஆங்கிலம் இணைமொழியாக நீடிக்கும். ஆதலால், இங்கும் ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அதிலிருக்கிற விவாத அல்லது நியாயத் தன்மைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் தமிழுக்காகவே ஏங்கிக் கொண்டிருப்பதாக அறிவித்துக் கொள்ளும் தி.மு.க. உறுப்பினர்கள் இந்த ஆங்கில நீடிப்பையும் வரவேற்றிருக்கிறார்கள். அவர்கள் இந்தி வந்துவிடும் என்ற அச்சத்தால், இதை வரவேற்கிறோம் என்று