பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொண்டுள்ள வயிறு அல்ல; ஊதிப்போன வயிறு: மகோதரம். அவ்வளவுதான். அது போலக் கருத்துரைகள் கேட்டல், பரிந்துரைகள் கேட்டல், விளக்கங்கள் கேட்டல், சில தகவல்கள் கேட்டல், நினைவூட்டுக்கள்; நேர்முகக் கடிதங்கள் இப்படியாகப் பலப்பல. ஆயினும் முடிவு கோப்புப் பெருத்தது தான்; உண்டு அல்லது இல்லை என்ற முடிவாவது உண்டா? அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் அறிவிக்கமாட்டார்கள். பரிசீலனையில் இருக்கிறது என்பர், ஏன் இந்த நிலை? நாட்டை வளப்படுத்த வேண்டும். மேம்படுத்த வேண்டும் என்ற குறிக்கோள் இல்லை. அக்குறிக்கோளுக்காக வேலைக்கு வரவில்லை. வேலைக்கு வந்த காரணம் கவலைப்படாமல் மாதம் முதல் தேதி ஊதியம் வாங்க, இந்த மனப்போக்கில்லையானால் பொதுத் துறையில் இழப்பு வருமா? கூட்டுறவில் விலை கூடுமா? இன்று இந்த நிலை நாட்டின் எல்லா மட்டங்களிலும் நிலவுகிற உண்மை. இந்நிலையை நீடிக்க அனுமதிப்பது நல்லதல்ல.

இதுமட்டுமா? நாட்டில் பல இலட்சம் பேர் 'வேலையில்லை வேலையில்லை” என்று பல்லவி அனுபல்லவி பாடுகின்றார்கள். உண்மை என்ன? இன்று இந்தியாவில் இருப்பது வேலையில்லாத் திண்டாட்டமா? அல்லது விரும்பும் வேலை கிடைக்காத திண்டாட்டமா? விரும்பும் வேலை என்றால் என்ன? அரசு வேலையாக இருக்க வேண்டும்! ஏவலர் வேலையாக இருந்தாலும் பரவாயில்லை; இப்போது காலியாக உள்ள கிராம மணியக்காரர் வேலையாகத்தான் இருக்கட்டுமே! அரசு வேலையாக இருக்க வேண்டும். அந்த வேலையும் அவர்கள் ஊர்ப்பக்கத்தில், முடிந்தால் அவர்கள் ஊரிலேயே கிடைக்க வேண்டும்; முதல் தேதி ஊதியம் கிடைக்க வேண்டும்; இதுதான் விரும்பும் வேலையின் இலக்கணம். இந்த அளவுக்கு மோசமாக, இளைஞர்கள் – அவர்களுக்கு முன் வாழ்வோர்கள் இருக்கிறார்கள்; இதற்கெல்லாம் காரணம் அவர்களுக்கு நாம் வழங்கிய கல்வி