பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

355


முன்வரவேண்டும். இதோடு கலால் வரியையும் ஐந்து ஆண்டுகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்; மாநில அரசுகள் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும். இங்ஙனம் பலரும் பல்லாற்றானும் ஒத்து வழங்கும் முயற்சி இருந்தால்தான் கிராமப்புறம் மேம்பாடு அடையும்.

உத்தரவாதம் வேண்டும்

கிராமங்களில் வாழும் மக்களுக்கு இன்று உத்தரவாதம் கூடக் கிடையாது. அவர்களுடைய சொத்துக்கள், உடைமைகள் கூட நகர்ப்புற மக்களாலும் - வட்டிக்கடைக்காரர்களாலும் எப்போதும் விலைக்கு வாங்கப் பெறலாம். கிராமப்புற மக்கள் நாளும் சுரண்டப்படுகிறார்கள். கிராமப்புற ஏழைகள் என்றால், காவல் நிலையத்தினருக்குக்கூடத் தொக்கடிதான்! இவை எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமையிலிருந்து பாதுகாப்பு தேவை. அதாவது கிராமப்புறத்தானின் உழைப்பினால் உருவாக்கப்பெறும் செல்வத்தில், அவன் ஒரு கணிசமான பகுதியை அடைந்து அனுபவிக்க உரிமையும் உத்தரவாதமும் வேண்டும்.

தீய சக்திகளிலிருந்து காப்பாற்ற வேண்டும்

கிராமப்புறத்து மக்களுடைய வருவாயை வளர்த்தலும், நிலைபெறுத்தலும் எளிதான செயலல்ல. ஆனால் இது நடக்க வேண்டும். நடந்தே ஆக வேண்டும். இந்த முயற்சி நடக்கும் பொழுதே கிராமப்புற மக்கள் கையில் சேரும் காசு, மூலதன வடிவத்தை - சொத்து வடிவத்தைப் பெறுவதற்கு முன்பே தட்டிப் பறிக்கின்ற தீய சக்திகள் பல வட்டிக்காரர்கள், புகையிலை, பீடி, விற்பனையாளர்கள், ஜோதிடர்கள், திரைப்படக் கொட்டகையாளர்கள், கள், சாராய விற்பனையாளர்கள், பரிசுச் சீட்டுகள், சூதாட்டம், வருவாயை விஞ்சிய ஆடம்பரப் பொருள்கள் முதலியன இத் தீய சக்திகள் ஆகிய இவற்றிலிருந்து கிராமத்து மக்களை முதலில் காப்பாற்றியாக வேண்டும்.