பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கவலையும் இன்றி ஊதிய உயர்வு, பதவி உயர்வு முதலியன பெற்று வருகின்றனர். ஏன் இந்த நிலை?

இந்தியாவில் - தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கம் தோல்வி என்றே பரவலாகப் பேசப்படுகின்றது. இன்று கூட்டுறவு இயக்கத்தில் பலருக்கு நம்பிக்கை இல்லை. நமது அரசுகளுக்கும் கூட்டுறவுத் துறை உயர் அலுவலர்களுக்கும் கூடக் கூட்டுறவில் நம்பிக்கை இல்லை. நடை முறை அப்படி இருக்கிறது. கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகக் கூட்டுறவு இயக்கத்தின் மூலம் சமூகப் பொருளாதாரம் வளரும் என்ற நம்பிக்கையுடன் ஊழியம் செய்து கொண்டு வரும் நமக்கும் கூட மனநிறைவு ஏற்பட்டிருப்பதாகக் கூறமுடியவில்லை. இதற்குக் காரணம் அரசு மட்டுமன்று, மக்களும் ஆவர். எப்போதும் அரசைச் சார்ந்து வாழ்கின்ற நிலையும் தனி உடைமைக் கோட்பாடும் கூட்டுறவு வளர்சிக்குத் தடை; அதைவிட "நான்" "நீ" என்ற பெருமைச் சண்டை கூட்டுறவு நிறுவனங்களில் தோன்றி வருகின்றன. நமக்குத் தெரிந்த ஒரு கூட்டுறவுத் தொழிற்சாலையில் 50 பேர் ஆண்கள் வேலை செய்கிறார்கள். இவர்களுக்குள் இருக்கும் அணுகுமுறைகளும் உறவும் குழுப்போட்டிகளும் அருவருக்கத்தக்க அளவுக்கு வளர்ந்து அடிதடி அளவுக்குக்கூடச் சென்றுவிட்ட வேதனையை மறக்க முடியவில்லை. உறுப்புகள் பலமாக இருந்தால்தானே உருவம் பலமாக இருக்க முடியும்? ஆனாலும் கூட்டுறவுத் துறையில் நமது நாட்டு மக்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது. அரசுகளும் கூட்டுறவுத் துறையை வளப்படுத்துவதன் மூலம்தான் நலிந்த மக்களுக்கு, குறிப்பாகக் கிராமப்புற மக்களுக்கு ஆன்மிக பொருளாதார வளர்ச்சிகளைத் தரமுடியும் என்று உறுதியாக நம்பி, அதற்குரிய வழிவகைகளைக் காணவேண்டும். ஏனெனில் கூட்டுறவே சமவாய்ப்புச் சமுதாயத்திற்குரிய ஒரே வாயில் என்பது வரலாறு காட்டும் உண்மை; அரசியல் பொருளாதாரச் சிந்தனையார்களின் கருத்தும் கூட.