பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

549



பொருள் முயற்சி இருவகைப்படும்; ஒன்று, பொருள்களை உற்பத்திச் செய்யும் முயற்சி, இன்னொன்று பொன் (நாணயம்) பெறும் முயற்சி. அதாவது, பணம் தேடும் முயற்சி, நல்லதன்று. பொருளை உற்பத்தி செய்யும் முயற்சியே வரவேற்கத்தக்கது. வட்டிக் கடை நடத்துதல், வாணிகம் செய்தல் ஆகியன பணம் தேடும் முயற்சியின்பாற்பட்டவை. வேளாண்மைத் தொழில் செய்தல், வேறு பல துறைகளின் மூலம் மக்கள் பொருள்களை உற்பத்தி செய்தல் ஆகியன பொருள் உற்பத்தியைச் சார்ந்தவை. முன்னையது ஒறுக்கத்தக்கது - பின்னையது வரவேற்கத்தக்கது.

ஒரு நாட்டின் பொருளாதாரச் செழிப்பு அந்த நாடு பொருள் உற்பத்தியில் ஈடுபடுவதைப் பொறுத்ததேயாம். பொருள் உற்பத்தி பெருகாமல், சமநிலைச் சமுதாயத்தை எப்படி அமைக்க முடியும் தரித்திரத்தையா பங்கு போடுவது? அதனாலேயே திருவள்ளுவர் வலிமை நிறைந்த குரலில், “செய்க பொருளை” என்று ஆணையிடுகிறார். செய்க பொருளை என்று ஆணையிட்டமையாலேயே “செய்க பொன்” என்பது விலக்கப் பெறுகிறது. பொருள் எனும் வழக்கு மனித குலம் அனுபவிக்கக் கூடிய பொருள்களையே குறிக்கும். இதனைப் பரிபாடலில் வரும். “சேர்வாராதலின் யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல - நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒலிதாரோயே” என்ற பாடலால் உணரலாம்.

பொருள் உற்பத்தி செய்யும் உணர்ச்சியில் பொருள்களுக்கு மதிப்புத் தருகிற உணர்ச்சியில் நம் நாட்டு மக்களின் உணர்வு இப்பொழுது பின் தங்கியே இருக்கிறது. விலை மதிப்புள்ள மாடுகளை - கால்நடைகளைக் கவனிப்பதில்லை. தானியங்களைப் பாதுகாப்பதில்லை - ஆனால், சிறு காசுகளைக் கூட முடிந்து பத்திரமாகக் காப்பாற்றுகிறார்கள். பணம், பொன் இவற்றில் உள்ள பற்றுதல் குறைந்து பொருள் உற்பத்தித் துறையில் நாட்டு மக்களின் ஆர்வம் பெருக வேண்டும்.

கு.xiii.36.