பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கடமைகளை விருப்பார்வத்துடன் செய்யவேண்டும். மற்றவர்க்கு உதவி செய்யும் வாழ்க்கையை ஆர்வத்துடன் செய்யவேண்டும்.

புகழ் விரும்பிய வாழ்க்கையில் பழிவருதல் தவிர்க்க இயலாதது. அதனால், பழிக்கும், வசைக்கும் அஞ்சி, கொண்ட கொள்கையை (இலட்சியத்தை) விடக்கூடாது.

புகழ் விரும்பிய வாழ்க்கையில் சராசரி வாழ்க்கையின் இன்பங்களைக்கூட இழக்க வேண்டிவரும். அதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது.

பொருளிழப்பு முதலியன நேரிடலாம். கவலைப்படக் கூடாது.

‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.’

231

வறியவர்களுக்குரியனவற்றைத் தந்து உதவிசெய்து வாழ்தலே வாழ்க்கை. உயிர்க்கு ஊதியமாகிய புகழும் இதுவேயாம்.

உயிர்க்குரிய ஊதியம் புகழ் என்பது கருத்து.

வறியோரின் துன்பம் நீக்கும் வாயிலாகப் பெறும் புகழே உயிர்க்கு ஊதியம் என்பது கருத்து.

வறுமையுடையோரின் துன்பம் நீக்க உதவி செய்தலைப் பிறர்க்கு உதவி செய்தல் மட்டுமாகக் கருதக் கூடாது. அது ஒருவர்க்கு ஊதியமாகவும் விளங்குகிறது.

உதவி செய்தல் என்பது மற்றவர் உயிர் வாழவும் உயர்வு பெறத் தக்கதாகவும் அமைய வேண்டும்.

உதவி செய்வதன்வழி ஊதியமும் புகழும் கிடைப்பதால் உதவி செய்யப்படுவோரை எள்ளி நகையாடல் கூடாது.

உதவி செய்யப்படுவோரை நொந்து, நோகச் செய்து பின் கொடுத்தல் புகழும் இல்லை; ஊதியமும் ஆகாது.